

மதுரை,
மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று மதுரைக்கு வருகை தந்துள்ளார். பொதுக்கூட்டத்திற்கு முன்னதாக, மதுரை விமான நிலையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
இந்த விழாவில் ரூ.4,400 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்தார். இதன்படி, சென்னை கடற்கரை-எழும்பூர் இடையேயான 4-வது வழித்தடம், காரைக்குடி உள்ளிட்ட 8 மறுசீரமைக்கப்பட்ட ரெயில் நிலையங்கள், கும்பகோணம், வேலூர், ஏற்காடு உள்ளிட்ட இடங்களில் ஆகாஷ்வாணி பண்பலை உள்ளிட்ட திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, மரக்காணம்-புதுச்சேரி பிரிவு, பரமக்குடி-ராமநாதபுரம் பிரிவு 4 வழிச்சாலை பணிக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர் எ.வ.வேலு, மத்திய இணை மந்திரி எல்.முருகன், தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.