பிரதமர் மோடி தமிழகம் வருகை: ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடம் திடீர் மாற்றம்


பிரதமர் மோடி தமிழகம் வருகை: ஹெலிகாப்டர் தரையிறங்கும் இடம் திடீர் மாற்றம்
x

ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்று, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடுகிறார்.

சென்னை,

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி இன்று (சனிக்கிழமை) தமிழகம் வருகிறார். இதற்காக மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு 7.50 மணிக்கு தூத்துக்குடி வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு முக்கிய பிரமுகர்கள் வரவேற்பு அளிக்கிறார்கள்.

பின்னர் ரூ.452 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். இதற்கான விழா இரவு 8 மணியளவில் நடைபெறுகிறது. பின்னர் விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொண்டு, ரெயில்வே துறையில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.1,030 கோடி மதிப்பிலான பணிகள், நெடுஞ்சாலைத்துறையால் முடிக்கப்பட்டுள்ள ரூ.2 ஆயிரத்து 571 கோடி மதிப்பிலான பணிகள், ரூ.548 கோடி மதிப்பீட்டில் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4-வது பிரிவில் மின்சாரத்தை வெளியேற்றுவதற்காக உள்ள மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் என ரூ.4 ஆயிரத்து 800 கோடி மதிப்பிலான திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்.

விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி மற்றும் மத்திய மந்திரிகள், மாநில அமைச்சர்கள் என பலர் கலந்துகொள்கின்றனர். பிரதமர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏடிஎஸ்பி, டிஎஸ்பி, 3 ஆய்வாளர்கள் மற்றும் 75 போலீசார் 24 மணி நேரமும் படகி்ல் ரோந்து சென்று, கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். டிரோன்கள் மூலம் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விழா முடிந்த பிறகு தனிவிமானம் மூலம் பிரதமர் மோடி திருச்சி செல்கிறார். இரவு 10.30 மணி அளவில் திருச்சிக்கு வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதன்பிறகு பிரதமர் மோடி கார் மூலம் சென்று திருச்சி கலெக்டர் அலுவலக சாலையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.

நாளை (ஞாயிற்றுகிழமை), அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெறும் ஆடித் திருவாதிரை விழாவில் பங்கேற்று, ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிடுகிறார். பிரதமர் மோடியின் தமிழக வருகையையொட்டி, அவரை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரதமர் தமிழகம் வருகையை ஒட்டி ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தநிலையில் திடீரென அது மாற்றப்பட்டுள்ளது. இதன்படி கங்கை கொண்ட சோழபுரம் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகள் இருப்பதன் காரணமாக பிரதமர் மோடி பயணிக்கும் ஹெலிகாப்டர் தரையிரங்குவதில் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து பொன்னேரியில் ஹெலிபேட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

1 More update

Next Story