திருநெல்வேலியில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

அம்பாசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு சிறுமியிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார்.
திருநெல்வேலியில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை
Published on

கடந்த 2024-ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே சுப்பிரமணியபுரம் பொத்தையை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (வயது 68) என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவரிடம், பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில், காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, புலன் விசாரணை மேற்கொண்டு பாலசுப்பிரமணியனை கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நீதிபதி சுரேஷ்குமார் வழக்கை விசாரித்து, நீதிமன்ற விசாரணை முடிவுற்ற நிலையில், குற்றவாளிக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, நேற்று குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு லட்சம் ரூபாய் நிவாரணத்தொகை வழங்க உத்தரவிட்டு தீர்ப்பளித்தார்.

இவ்வழக்கில் சாட்சிகளை விரைவாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த அம்பாசமுத்திரம் உட்கோட்ட டி.எஸ்.பி. சதீஷ்குமார், சிறப்பாக புலன் விசாரணை செய்த அம்பாசமுத்திரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வனிதா, அனைத்து மகளிர் காவல் நிலைய காவல்துறையினர், குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் உஷா ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் துரித நடவடிக்கையால் 2025 -ம் ஆண்டு இதுவரை 17 போக்சோ வழக்குகளில் ஈடுபட்ட 18 குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்க வகையில், ஒரு குற்றவாளிக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனையும், 4 நபர்களுக்கு ஆயுள் தண்டனையும், ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் பெற்று தரப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்ட காவல்துறையானது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, அவர்களுக்கெதிராக குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது தனிப்பட்ட கவனத்துடன் தீவிரமான மற்றும் தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com