தூத்துக்குடியில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு சாகும் வரை சிறை

தூத்துக்குடியில் 10 வயது சிறுமி, 8 வயது சிறுவன் ஆகிய இரு குழந்தைகளை துன்புறுத்தி பாலியல் தாக்குதல் நடத்திய நபர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
தூத்துக்குடியில் போக்சோ வழக்கு குற்றவாளிக்கு சாகும் வரை சிறை
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம் ஆண்டு 10 வயது சிறுமி மற்றும் 8 வயது சிறுவன் ஆகிய இரு குழந்தைகளை துன்புறுத்தி பாலியல் தாக்குதல் நடத்திய தூத்துக்குடியைச் சேர்ந்த சின்னதம்பி(எ) லம்பா (வயது 34) என்பவர் மீது தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு இறுதி அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் விசாரணை தூத்துக்குடி போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரீத்தா நேற்று சின்னதம்பி(எ) லம்பா என்பவரை குற்றவாளி என உறுதி செய்து அவருக்கு சாகும் வரை வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை மற்றும் ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும் மேலும் பாதிக்கப்பட்ட 2 சிறுவர்களுக்கு அரசு நிவாரண நிதியிலிருந்து ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.10 லட்சம் இழப்பீடு தொகை வழங்கவும் உத்தரவிட்டு தீர்ப்பு வழங்கினார்.

மேலும் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி சின்னதம்பி(எ) லம்பா என்பவர் ஏற்கனவே கடந்த 2022-ம் ஆண்டு தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு 2025-ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு 2 நீதிமன்றம் (ADJ 2) அவருக்கு ஆயுள்தண்டனை விதித்து தற்போது சிறையில் உள்ள நிலையில் இந்த போக்சோ வழக்கில் சாகும் வரை சிறைதண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்று தந்த தூத்துக்குடி நகர உட்கோட்ட டி.எஸ்.பி. சுனில், இந்த வழக்கினை திறம்பட புலனாய்வு செய்த அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சாந்தகுமாரி, ராமலெட்சுமி, நீதிமன்றத்தில் சிறப்பாக வாதிட்ட சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் ஜுடு ஏஞ்சலோ, வழக்கின் விசாரணைக்கு உதவியாக இருந்த ஏட்டுகள் சமுத்திரகனி, ரபிலாகுமாரி ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. மதன் பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com