சென்னை எண்ணூரில் விஷ வாயு: பொதுமக்கள் பாதிப்பு - உரிய நிவாரணமும், பாதுகாப்பும் அளித்திட கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

விசாரணை நடத்தி தவறிழைத்த நிர்வாகத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சென்னை எண்ணூரில் விஷ வாயு: பொதுமக்கள் பாதிப்பு - உரிய நிவாரணமும், பாதுகாப்பும் அளித்திட கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்
Published on

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

சென்னை, எண்ணூர் கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் 26.12.2023 இரவு சுமார் 11.30 மணி அளவில் அளவுக்கு அதிகமாக அம்மோனியா வாயுவை கடல் வழியாக திறந்து விட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் கடல் அலை 4 அடி உயரத்திற்கு எழும்பியதாகவும் தெரிவிக்கிறார்கள். எண்ணூர் பகுதியில் உள்ள பெரிய குப்பம், சின்னக்குப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட 18 கிராமங்களில் உள்ள மக்களுக்கு மூச்சுத் திணறல் மயக்கம் ஏற்பட்டு பெரிய பாதிப்புக்குள்ளாயினர். சுமார் 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக அறிகிறோம். கடலில் மீன்களும் செத்து மிதக்கிறது. ஏற்கனவே, பெருவெள்ளத்தின்போது எண்ணெய் கசிவினால் பாதிக்கப்பட்ட மக்கள் அதிலிருந்து மீண்டுவருவதற்கு முன்பே இத்தகைய துயர சம்பவம் நடந்துள்ளது.

எனவே, தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையில் விசாரணை நடத்தி தவறிழைத்த நிர்வாகத்தின் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உயரிய மருத்துவ சிகிச்சையும், நிவாரணமும் அளித்து உதவிட வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

மேற்படி, கோரமண்டல் உரத் தொழிற்சாலையினால் பல்லாண்டு காலமாக இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்கள் போராட்டம் நடத்தும் போது சில நடவடிக்கைகளை மேற்கொள்வதும், பிறகு தொடர்ந்து வாயு கசிவால் பாதிப்புகள் ஏற்படுவதும் தொடர்கதையாகி வருகிறது. தற்போது இத்தொழிற்சாலையை தற்காலிகமாக மூடுவதற்கு அரசு உத்தரவிட்டுள்ளது. மக்கள் அடர்த்தியாக வாழும் குடியிருப்பு பகுதிக்கு அருகிலேயே இருக்கும் இத்தொழிற்சாலையில் கடந்த காலங்களிலும் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டிருக்கும் நிலையில் தொழிற்சாலை நிர்வாகம் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனம் செலுத்தவில்லை என்றும் எனவே, ஆலையை நிரந்தரமாக மூட வேண்டுமென்றும் பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கையை முன்வைத்திருக்கின்றனர்.

எனவே, ஆலை நிர்வாகம், மக்களின் உணர்வுகளை கணக்கில் கொண்டு உரிய பாதுகாப்பை அளித்திட வேண்டுமென்றும், அரசு நிர்வாகங்கள் அதை உத்தரவாதப்படுத்த வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com