

கம்பத்தில் தூய்மை பணியாளர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது தூய்மை பணியாளர்களை வார்டு விட்டு வார்டு இடமாற்றம் செய்தல், தனியார் ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்தும், கவுன்சிலர்கள் அதிக வேலை கொடுப்பதை கண்டித்தும் கோஷமிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து கம்பம் தெற்கு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டியன் சம்பவ இடத்திற்கு வந்தார்.
பின்னர் சுகாதார அலுவலர் சுந்தரராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் தூய்மை பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது ஆணையாளர் வெளியூர் சென்று இருப்பதால் அவர் வந்தவுடன் கோரிக்கைகள் குறித்து பேசி தீர்வு காணப்படும். தற்போது தூய்மை பணியாளர்கள் அவரவர் பழைய வார்டுகளிலேயே பணிபுரியலாம் என்றனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.