சென்னை பள்ளி மாணவர் கொலை வழக்கில் 6 பேரை கைது செய்த போலீசார்

மாணவர்களுக்கிடையே யார் சீனியர் என்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சென்னை பள்ளி மாணவர் கொலை வழக்கில் 6 பேரை கைது செய்த போலீசார்
Published on

சென்னை,

சென்னையில் பிளஸ்-2 மாணவர் கொலை வழக்கில் தொடர்புடைய 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிளஸ்-2 மாணவர்

சென்னை திருவொற்றியூர் தாங்கல் வசந்த் நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷின் மகன் தனுஷ் (வயது 16). இவர் விம்கோ நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில் பள்ளி அருகே உள்ள அஜாக்ஸ் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் தனுஷ் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் தனுஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தகராறு

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வண்ணாரப்பேட்டை போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன், திருவொற்றியூர் உதவி கமிஷனர் பால்ராஜ், இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் உள்ளிட்ட போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், 2 நாட்களுக்கு முன்பு அதே பள்ளியில் பிளஸ்-2 மாணவர் ஒருவருக்கும், பிளஸ்-1 மாணவர் ஒருவருக்கும் யார் சீனியர் என்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

மயங்கி விழுந்து உயிரிழப்பு

இந்த நிலையில் அந்த பள்ளியின் பிளஸ்-1 மாணவர், அதே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து தனுஷை அஜாக்ஸ் பஸ் நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்திற்கு அழைத்துச் சென்று தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த தனுஷ், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த பிளஸ்-1 மாணவர் உள்பட 10-க்கும் மேற்பட்டோரை தேடி வந்தனர்.

6 பேர் கைது

இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக 12 பேரிடம் விசாரணை நடத்தி வந்த போலீசார் 6 பேரை கைது செய்துள்ளதாகவும், அவர்களை பொன்னேரி நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே மாணவர் தனுஷ் உடலை பெற இரண்டாவது நாளாக அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com