அடகு கடைக்குள் புகுந்து ரூ.50 லட்சம் நகைகளை கொள்ளையடித்த 3 பெண்கள்

போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 42 பவுன் நகை, 7 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டது.
நகைகளை கொள்ளை
Published on

கள்ளக்குறிச்சி,

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அடுத்த சிக்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 57). இவர் தியாகதுருகத்தில் நகை அடகு கடை வைத்துள்ளார். இந்த கடையில் கடந்த 12-ந் தேதி மர்மநபர்கள் ரூ.50 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா, சப்-இன்ஸ் பெக்டர் மாணிக்கம் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

பெருந்துறை விரைந்த தனிப்படையினர்

இந்த தனிப்படையினர். அந்த பகுதியில் பதிவான செல்போன் எண்களின் விவரங்களை சேகரித்தனர். அப்போது, கொள்ளை நடந்த நாளில், அடகு கடை பகுதியில் பதிவாகி இருந்த ஒரு செல்போன் எண்ணானது. ஈரோடு மாவட்டம் பெருந்துறை பகுதியில் செயல்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர் அங்கு சென்று, செல்போன் எண்ணை பயன்படுத்தி வந்த பெண்ணை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம் வானாபுரம் தாலுகா முனிவாழை கிராமத்தைச் சேர்ந்த பச்சையாபிள்ளை மகள் பவானி (வயது 31) என்பது தெரியவந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் வெளியான விவரம் வருமாறு:-

4 பேர் கைது

பவானி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள ஒரு பனியன் கம்பெனியில் வேலைக்கு சென்றார். அங்கு அவருடன் பணிபுரிந்த மதுரை தாமரைப்பட்டி பகுதியைச் சேர்ந்த இதயதுல்லா மனைவி சகிதாபேகம் (31), தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 15 வயது பெண் ஆகியோரிடம், தற்போது நாம் வறுமையில் வாழ்ந்து வருகிறோம். எங்கள் ஊர் பகுதியில் உள்ள அடகு கடையில் திருடினால் பணக்காரர்களாக மாறிவிடலாம் என்று கூறி இருக்கிறார்.

இதையடுத்து 3 பேரும் கொள்ளையடிக்க சதிதிட்டம் போட்டு, தியாகதுருகத்திற்கு வந் துள்ளனர். பின்னர். 15 வயது சிறுமியின் நண்பரான தஞ்சாவூர் மாவட்டம் நல்லிச்சேரி பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் விஷால் (20) என்பவரையும் தங்களுடன் அவர்கள் சேர்த்துக்கொண்டனர். இதையடுத்து 4 பேரும் நகைகளை கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பவானி, சகிதாபேகம், விஷால், 15 வயது சிறுமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 42 பவுன் நகை, 7 கிலோ வெள்ளி பொருட்கள் மீட்கப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com