ஆஸ்பத்திரிக்குள் புகுந்து மிளகுத்தூள் 'ஸ்பிரே' அடித்து டாக்டரிடம் கொள்ளை - 4 பேர் கும்பலை மடக்கி பிடித்த போலீசார்

சோழிங்கநல்லூரில் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து டாக்டர் முகத்தில் மிளகுத்தூள் ‘ஸ்பிரே’ அடித்து கத்திரிக்கோல் முனையில் பணம் பறித்த சம்பவத்தில் 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.
ஆஸ்பத்திரிக்குள் புகுந்து மிளகுத்தூள் 'ஸ்பிரே' அடித்து டாக்டரிடம் கொள்ளை - 4 பேர் கும்பலை மடக்கி பிடித்த போலீசார்
Published on

சோழிங்கநல்லூர் காந்தி நகரில் சதீஷ்குமார் (வயது 28) என்பவர் ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். கடந்த 28-ந்தேதி இரவு மர்மநபர்கள் 2 பேர் ஆஸ்பத்திரிக்குள் புகுந்து மிளகுத்தூள் ஸ்பிரேவை டாக்டர் சதீஷ்குமார் முகத்தில் அடித்தனர். பின்னர் ஆஸ்பத்திரியில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து கழுத்தில் வைத்து மிரட்டி அவரிடமிருந்து ரூ.20 ஆயிரத்தை பறித்தனர்.

மேலும் டாக்டரின் செல்போன் மற்றும் அவருக்கு சொந்தமான கார் சாவி ஆகியவற்றை எடுத்துக் கொண்டதுடன், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை உடைத்துவிட்டு தப்பிச் செல்ல முயன்றனர்.

அப்போது டாக்டர் சதீஷ்குமார் கூச்சலிட்டதால் அங்கு பொதுமக்கள் திரண்டனர். இதனால் பயந்துபோன மர்மநபர்கள் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடினர்.

பழைய மாமல்லபுரம் சாலை வழியாக தப்பிச்செல்ல முயன்றபோது, சாலையில் சென்று கொண்டிருந்த கார் மோதியதில் ஒருவர் கீழே விழுந்து காயமடைந்தார். மற்றொருவர் தப்பி ஓடினார். கீழே கிடந்த அந்த நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து செம்மஞ்சேரி போலீசாரிடம் ஒப்படைத்தனர். காயம் அடைந்த அவரை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இது தொடர்பாக டாக்டர் சதீஷ்குமார் அளித்த புகாரின்பேரில் செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில் பிடிபட்டநபர், பிரகாஷ் (38) என்பதும், தப்பி ஓடிய நபர் வெற்றிச்செல்வன் என்பதும் தெரியவந்தது.

மேலும் பிரகாஷ் கொடுத்த தகவலின் பேரில், நீலாங்கரையில் பதுங்கி இருந்த வெற்றிச்செல்வன் (35), சத்தியசீலன் (36), பிரதாப் (36) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்தனர். அங்கு வைத்திருந்த ஏர்கன்-ஐ பறிமுதல் செய்து 3 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், பாதிக்கப்பட்ட டாக்டர் சதீஷ்குமாரும், கைதான சிதம்பரத்தை சேர்ந்த சத்தியசீலன் ஆகிய இருவரும் சுமார் 10 ஆண்டுகளாக நண்பர்கள் என்பதும், இருவரும் கடந்த 6 மாதத்திற்கு முன்பு மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்து விட்ட நிலையில், சதீஷ்குமாரிடம் அதிக பணம் இருப்பதையறிந்து நண்பர்களுடன் சேர்ந்து அவரிடம் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியதும் தெரியவந்தது.

இதற்காக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரகாஷ், பிரகாஷின் தம்பி பிரதாப், வெற்றிச்செல்வன் ஆகிய 3 பேருடன் இணைந்து சத்தியசீலன் இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்தனர். கைதான 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களிடம் இருந்து கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய கத்திரிக்கோல், மிளகுத்தூள் ஸ்ப்ரே, கொள்ளையடித்த கார் சாவி, கண்காணிப்பு கேமரா, செல்போன், ஒரு துப்பாக்கி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com