டிரைவரை செருப்பால் அடித்த விவகாரம்: போக்குவரத்து உதவி மேலாளர் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு

சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாரிமுத்து மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார்.
மதுரை ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பஸ் புறப்படுவது தொடர்பாக திருப்பூர் அரசு பஸ் டிரைவர் கணேசனுக்கும் போக்குவரத்து உதவி மேலாளர் மாரிமுத்துவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் முற்றிய நிலையில் பஸ் டிரைவரை உதவி மேலாளர் செருப்பால் அடித்தார். இந்த சம்பவத்தை அங்கு நின்றுகொண்டிருந்த பயணிகள் வீடியோவாக எடுத்தனர். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் போக்குவரத்து உதவி மேலாளர் மாரிமுத்துவை சஸ்பெண்ட் செய்து மதுரை மண்டல போக்குவரத்து நிர்வாக இயக்குநர் நடவடிக்கை எடுத்தார். அதேவேளை, இந்த விவகாரம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட மாரிமுத்து மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்டார்.
இந்நிலையில், டிரைவரை செருப்பால் அடித்த விவகாரம் தொடர்பாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட போக்குவரத்து உதவிமேலாளர் மாரிமுத்து மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாரிமுத்து உள்பட 4 பேர் மீது 5 பிரிவுகளின்கீழ் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.