

தூத்துக்குடி,
தூத்துக்குடி பிரையன்ட்நகர் பகுதியைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இவர் சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இதுகுறித்து கடந்த 6-ம் தேதி தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து வசந்தகுமாரை தேடி வந்தனர்.
தலைமறைவாக இருந்த வசந்தகுமாரை நேற்று போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக மருத்துவ பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக போலீசாரின் பிடியில் இருந்து வசந்தகுமார் தப்பியோடினார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அவரைப் பின் தொடர்ந்து விரட்டிச் சென்றனர். சிறிது நேரப் போராட்டத்திற்கு பிறகு வசந்தகுமாரை போலீசார் மடக்கிப் பிடித்தனர். இந்த சம்பவம் மருத்துவமனை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது அவர் பலத்த பாதுகாப்புடன் சிறையில் அடைக்கப்பட்டார்.