

சென்னை
தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி வேட்டை நடத்தியதில் 350-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
தமிழகத்தில் 2 நாட்களில் 17 பேர் கொலை செய்யப்பட்டதற்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.
முதல்-அமைச்சருடனான ஆலோசனையில் தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், டி.ஜி.பி., சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தீபாவளி பண்டிகை நாளில் மட்டும் 11 கொலைகள் நடந்துள்ளதை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் வைத்த நிலையில் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தப்பட்டன என தகவல்கள் வெளியாகி இருந்தன.
இந்த நிலையில், தமிழகம் முழுவதும் சட்டம் ஒழுங்கை சீர் செய்யும் நடவடிக்கையாக போலீசார் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். இதன்படி, சென்னையில் 185 ரவுடிகள் உள்பட 222 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 36 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சிவகங்கையில் ஒரே இரவில் 43 சரித்திர பதிவேடு குற்றவாளிகளை கைது செய்தனர். 948 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 130 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நெல்லையில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். தஞ்சையில் ஒரே இரவில் 33 ரவுடிகள் உள்பட 295 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.