காவலர் நாள் விழா: போட்டியில் வென்ற மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார்


காவலர் நாள் விழா: போட்டியில் வென்ற மாணவர்களுக்கு மு.க.ஸ்டாலின் பரிசு வழங்கினார்
x

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற “காவலர் நாள் விழா 2025”-ல் காவலர் நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

சென்னை

தமிழ்நாடு முதல்-அமைச்சர் 29.4.2025 அன்று நடைபெற்ற 2025-2026 பட்ஜெட் கூட்டத்தொடரில், “முதன் முதலாக 1859-ம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி, நவீன மற்றும் அமைப்புரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6-ம் நாள் இனி ஆண்டுதோறும் காவலர் நாளாகக் கொண்டாடப்படும்” என்று அறிவித்தார்.

அதன்படி முதல் காவலர் நாள் கொண்டாட்டங்களைக் குறிக்கும் வகையில், அனைத்து காவல் நிலையங்களிலும் உறுதிமொழி ஏற்பு, இன்னுயிர் நீத்த காவல்துறையினருக்கு அஞ்சலி செலுத்துதல், காவல்துறையின் செயல்பாடுகளை பொதுமக்களிடம் கொண்டு செல்வது, காவல் குடும்பங்கள் மற்றும் சமூகத்தை உள்ளடக்கிய கலாச்சார நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்டங்கள் மற்றும் நகரங்களில் நடைபெற்றன.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்றைய தினம் சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற “காவலர் நாள் விழா 2025”-ல் காவலர் நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

காவலர் நாள் உறுதிமொழி:

“இந்திய அரசியலமைப்பின் பாலும், தமிழ்நாடு காவல் துறையின், உயரிய நோக்கங்களின் பாலும், நான் உண்மையான ஈடுபாடும், உளமார்ந்த பற்றும் கொண்டிருப்பேன் என்று, மனமாற உறுதி கூறுகிறேன்.

எந்தவித அச்சமோ, விருப்பு வெறுப்போ இன்றி, அனைத்து தரப்பு மக்களுக்கும், நியாய உணர்வுடன் என் கடமைகளை நிறைவேற்றுவேன் என்றும் உறுதியளிக்கிறேன்.” என்று கூறி உறுதிமொழி ஏற்கப்பட்டது.

மேலும் காவலர் நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றிபெற்ற காவலர் குடும்பங்களைச் சார்ந்த மாணவ, மாணவியர்களுக்கு முதல்-அமைச்சர் பரிசுகளை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் காவல் துறை தலைமை இயக்குநர் (பொறுப்பு) வெங்கடராமன், சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட காவல்துறை உயர் அலுவலர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story