காவலர் தினம்: திருநெல்வேலியில் காவலர் நினைவு ஸ்தூபியில் மலர் அஞ்சலி

செப்டம்பர் 6-ம் நாள் ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும் என தமிழக முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
முதன் முதலாக 1859-ம் ஆண்டில் மெட்ராஸ் மாவட்ட காவல் சட்டத்தை நிறைவேற்றி நவீன மற்றும் அமைப்பு ரீதியான காவல்துறை தோற்றுவிக்கப்பட்ட செப்டம்பர் 6-ம் நாள் ஆண்டுதோறும் காவலர் நாளாக கொண்டாடப்படும் என தமிழக முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். அதன்படி திருநெல்வேலி மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர் இணைந்து திருநெல்வேலி ஒருங்கிணைந்த ஆயுதப்படை வளாகத்தில் உள்ள காவலர் நினைவு ஸ்தூபியில் உயிர் நீர்த்த காவலர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருநெல்வேலி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (மேற்கு) பிரசண்ணகுமார், திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன், மாநகர போலீஸ் கமிஷனர்கள் வினோத் சாந்தாராம் (கிழக்கு), விஜயகுமார் (தலைமையிடம்) மற்றும் மாநகர மாவட்ட காவல் அதிகாரிகள் கலந்துகொண்டு காவல் பணிக்காக தங்களது உயிரினை இழந்தவர்களின் தியாகங்கள் பற்றியும், காவல் பணியின் சிறப்பு பற்றியும் காவலர்களுக்கு எடுத்துரைத்தனர்.
மேலும் காவலர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில், காவல்துறை சம்பந்தப்பட்ட ஆவணங்கள், சிறப்புகள் மற்றும் ஆயுதத் தளவாடங்கள் சம்பந்தமாக கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. காவலர் மற்றும் காவலர் குடும்பத்தினருக்கான கலை மற்றும் விளையாட்டு போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்பட்டன.






