'தென்மாவட்டங்களில் கூலிப்படை முற்றிலும் ஒழிக்கப்பட்டு உள்ளது"-போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி

தென்மாவட்டங்களில் கூலிப்படை முற்றிலும் ஒழிக்கப்பட்டு உள்ளதாக நெல்லையில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்
'தென்மாவட்டங்களில் கூலிப்படை முற்றிலும் ஒழிக்கப்பட்டு உள்ளது"-போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேட்டி
Published on

தென்மாவட்டங்களில் கூலிப்படை முற்றிலும் ஒழிக்கப்பட்டு உள்ளதாக நெல்லையில் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

கட்டுமான பணிகள் ஆய்வு

தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று நெல்லை மாவட்ட பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு வந்தார். அங்கு புதிதாக கட்டப்பட்டு வரும் மாவட்ட மற்றும் மாநகர ஆயுதப்படை அலுவலக கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். தொடர்ந்து இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிள்களில் ரோந்து மேற்கொள்ளும் போலீசார் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் மரணம் அடைந்த போலீசாரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இந்த ஆய்வில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், துணை போலீஸ் கமிஷனர்கள், சீனிவாசன், சரவணக்குமார், அனிதா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன் (நெல்லை), பாலாஜி சரவணன் (தூத்துக்குடி), கிருஷ்ணராஜ் (தென்காசி), ஹரிகிரண் பிரசாத் (கன்னியாகுமரி) மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

கஞ்சா வழக்கு

தமிழகத்தில் ஆபரேஷன் கஞ்சா வேட்டை 3.0 என்ற பெயரில் கஞ்சா தடுப்பு வேட்டை நடத்தப்பட்டது. இதன்மூலம் இந்த ஆண்டு 9 ஆயிரத்து 207 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12 ஆயிரத்து 635 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.28 கோடி மதிப்புள்ள 23 ஆயிரத்து 390 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை சரகத்திற்கு உட்பட்ட நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடத்தப்பட்ட கஞ்சா வேட்டையில் 757 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதன்மூலம் 1,241 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி மதிப்புள்ள 1,205 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

குட்கா வழக்கு

குட்கா கடத்தியது, விற்பனை செய்தது போன்ற குற்றங்களுக்காக 29 ஆயிரத்து 111 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. 30 ஆயிரத்து 273 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.48 கோடி மதிப்பிலான 4 லட்சத்து 87 ஆயிரத்து 577 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

நெல்லை சரகத்தில் 2 ஆயிரத்து 639 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 ஆயிரத்து 869 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.3 கோடி மதிப்பிலான 31 ஆயிரத்து 616 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

கூலிப்படை

நெல்லை சரகத்தில் போலீசார் நடத்திய ரவுடிகள் வேட்டை நடவடிக்கையால் கூலிப்படையினர், கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய 777 பேர் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இதன்மூலம் தென்மாவட்டங்களில் கூலிப்படைகள் முற்றிலும் ஒழிக்கப்பட்டு உள்ளது.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஜாதி மோதல்கள், வன்முறை, பழிக்குப்பழி நடக்கும் கொலைகளை தடுக்கும் பொருட்டு சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகளை கண்காணிக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் 3 அடுக்கு ரவுடிகள் கண்காணிப்பு அமைப்பு பின்பற்றப்பட்டு தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கடந்த காலங்களில் பல இடங்களில் காவல் துறையினர் மீது தாக்குதல் நடைபெற்று உள்ளது. தற்போது அதை போன்று தாக்குதல் சம்பவங்கள் நடந்தால், தற்காப்புக்காக குற்றவாளிகளை சுடலாம் என போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இந்த ஆண்டு போக்சோ சட்டத்தின் கீழ் 4 ஆயிரத்து 406 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கலந்துரையாடல்

முன்னதாக ஆயுதப்படை வளாகத்தில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களிடம் போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கலந்துரையாடினார்.

அதனை தொடர்ந்து மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நெல்லை மாநகர மற்றும் சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் கமிஷனர், போலீஸ் சூப்பிரண்டுகளுடன் சட்டம்-ஒழுங்கு குறித்து கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார். தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட போலீசாருக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com