31-ந்தேதி ஓய்வு பெறும் சங்கர்ஜிவால்.. புதிய டி.ஜி.பி. யார்? வெளியான பரபரப்பு தகவல்


31-ந்தேதி ஓய்வு பெறும் சங்கர்ஜிவால்.. புதிய டி.ஜி.பி. யார்? வெளியான பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 24 Aug 2025 10:43 AM IST (Updated: 24 Aug 2025 11:41 AM IST)
t-max-icont-min-icon

டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஓய்வு பெறுவதைத்தொடர்ந்து புதிய சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக யார் வருவார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

சென்னை,

தமிழக போலீஸ் டி.ஜி.பி.யாக சங்கர் ஜிவால் கடந்த 2023-ம் ஆண்டு ஜூன் மாதம் 30-ந்தேதி பதவியேற்றார். அவருடைய பதவிக்காலம் வருகிற 31-ந்தேதியுடன் முடிவடைகிறது. தமிழக போலீஸ்துறையில் இருந்து ஓய்வு பெறும் சங்கர் ஜிவால் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர். என்ஜினீயரான இவர் ஐ.பி.எஸ். தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.

இவர், சென்னையின் 108-வது போலீஸ் கமிஷனராக 2 ஆண்டுகள் பணியாற்றியவர். மெச்சத்தகுந்த பணிக்காக 2 முறை ஜனாதிபதி பதக்கம் பெற்றவர். இவருடைய மகள் தவ்தி ஜிவால் நடிகர் ரவிமோகன் நடிக்கும் ‘கராத்தே பாபு' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த நிலையில் சங்கர் ஜிவால் பணியில் இருந்து ஓய்வு பெற்றவுடன் சென்னையிலேயே தங்குவதற்கு முடிவெடுத்துள்ளார். இந்த தகவலை அவர் நேற்று பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார்.

டி.ஜி.பி. சங்கர் ஜிவால் ஓய்வு பெறுவதைத்தொடர்ந்து புதிய சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக யார் வருவார்? என்ற எதிர்பார்ப்பு போலீஸ் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளான சந்தீப்ராய் ரத்தோர், சீமா அகர்வால், வெங்கடராமன் உள்ளிட்டோர் பெயர்கள் அடங்கிய டி.ஜி.பி. பதவிக்கான பரிந்துரை பட்டியல் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பதாகவும், இதில் ஒருவர்தான் டி.ஜி.பி.யாக வருவார் என்றும் கூறப்படுகிறது.

இதில் சந்தீப்ராய் ரத்தோர், தமிழக போலீஸ் பயிற்சி கல்லூரி டி.ஜி.பி.யாகவும், சீமா அகர்வால், தீயணைப்புத்துறை இயக்குனராகவும், வெங்கடராமன், நிர்வாக பிரிவு டி.ஜி.பி.யாகவும் பதவி வகித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story