

நாகை மாவட்டம் வாய்மேடு அருகே சிந்தாமணிக்காடு மீனவ கிராமத்தில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் மற்றும் மீனவர்கள் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். கிராம பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பேசிய வேதாரண்யம் கடலோர காவல் குழும இன்ஸ்பெக்டர் பேசியபோது, 'கடற்கரை மற்றும் கடல் பரப்பில் நடக்கும் எந்த குற்றங்களுக்கும் மீனவர்கள் துணைபோக கூடாது. குற்றங்கள் மற்றும் கடத்தல் குறித்தும், அன்னியர்கள் நடமாட்டம் குறித்தும் உரிய நேரத்தில் போலீசாருக்கு மீனவர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். மீன் பிடி தொழிலுக்கு கடலுக்கு போகும்போது தகுந்த பாதுகாப்பு உடைகள், கருவிகளை எடுத்து செல்ல வேண்டும். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தை தெழிலாளர்களை அழைத்து செல்லக்கூடாது' என்றார்.