

தூத்துக்குடி,
தூத்துக்குடி மில்லர்புரம் பகுதியில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மில்லர்புரம் பர்மா காலனியில் ஓடை முனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலை நேற்று இரவு பூஜைகளை முடித்துவிட்டு பூசாரி பூட்டி விட்டு சென்றுவிட்டார். இன்று காலை 7 மணிக்கு கோவில் நடை திறக்க வந்தபோது கோவில் வாசல் அருகே இருந்த உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கோவில் தர்மகர்த்தா ராமர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது சம்பந்தமாக வழக்குப்பதி்வு செய்து, அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை ஆய்வு செய்து உண்டியல் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.