

தூத்துக்குடி,
தூத்துக்குடி பாத்திமாநகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் மரியசஞ்சய் (வயது 21). கீதாஜீவன் நகரைச் சேர்ந்தவர் சிலுவை பிச்சை(எ) பிச்சையா(28). இவர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4-ம் தேதி இரவு, மதுபோதையில் இருந்த பிச்சையா, மரியசஞ்சய்யின் தெருவில் படுத்துள்ளார். இதனை கண்ட மரியாசஞ்சய் மற்றும் அவரது உறவினர்கள், பிச்சையாவை பாதுகாப்பாக அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று படுக்க வைத்துள்ளனர்.
இதனையடுத்து, கடந்த 15-ம் தேதி இரவில் மரியசஞ்சயை சந்தித்த பிச்சையா, "நேற்று என் பையில் இருந்த ரூ.15 ஆயிரத்தை நீதான் எடுத்தாய்" எனக் கூறி தகராறு செய்துள்ளார். தான் பணம் எதுவும் எடுக்கவில்லை என மரியசஞ்சய் விளக்கமளித்தும், அதனை ஏற்காமல் பிச்சையா அவரைத் தாக்கி கீழே தள்ளியுள்ளார்.
மேலும், அங்கிருந்த மரிய சஞ்சய்யின் இருசக்கர வாகனத்தை கத்தியால் குத்தி சேதப்படுத்தியதோடு, அவரை கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் காயமடைந்த மரியசஞ்சய், சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து மரியசஞ்சய் அளித்த புகாரின் அடிப்படையில், தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.