மனைவியை அடித்துக் கொன்ற வியாபாரி - போலீசார் விசாரணை

மனைவியை அடித்துக்கொன்ற வியாபாரியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆதிதெருவை சேர்ந்தவர் நாகராஜ் (39 வயது). இவருடைய மனைவி சத்யா (36 வயது). இவர்களுக்கு 2 பெண் குழந்தைகளும், 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் பட்டுக்கோட்டையில் பழைய இரும்பு சாமான்கள் வாங்கி விற்று வந்தனர்.

நேற்று கணவன், மனைவி இருவரும் சரக்கு வேனில் ஒவ்வொரு கிராமங்களுக்கும் பழைய இரும்பு, பிளாஸ்டிக் பொருட்களை வாங்குவதற்காக சென்றனர். ஏனாதி செல்லியம்மன்கோவில் அருகே சென்றபோது திடீரென இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இருவரும் ஒருவரையொருவர் கைகளால் தாக்கி கொண்டதுடன், கையில் கிடைத்த ஆயுதத்தை எடுத்தும் தாக்கிக் கொண்டனர். இதில் சத்யா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். நாகராஜ் படுகாயம் அடைந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் வாட்டாத்திக்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், படுகாயமடைந்த நாகராஜை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் உயிரிழந்த சத்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com