165 ஆண்டுகால வரலாற்றை பறைசாற்றும் போலீஸ் அருங்காட்சியகம்

சென்னை எழும்பூரில் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலகத்தை புதுப்பித்து ரூ.6½ கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள போலீஸ் அருங்காட்சியகத்தை பொதுமக்கள் பார்வைக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
165 ஆண்டுகால வரலாற்றை பறைசாற்றும் போலீஸ் அருங்காட்சியகம்
Published on

போலீஸ் அருங்காட்சியகம்

சென்னை எழும்பூரில் உள்ள பாரம்பரியமிக்க பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு அங்கு 6 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் தமிழ்நாடு போலீஸ் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.24 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 2 தளங்களுடன் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.இதனை பொதுமக்கள் பார்வைக்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார்.

ரசித்து பார்த்தார்

பின்னர் அவர், அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள புகைப்படங்கள், ஆரம்பகாலத்தில் போலீசார் பயன்படுத்தி வந்த வாகனங்கள், துப்பாக்கி, தோட்டாக்கள் போன்றவற்றை பார்வையிட்டார். காட்சிப்படுத்தப்பட்டுள்ளவற்றை போலீஸ் அதிகாரிகள் மு.க.ஸ்டாலினுக்கு விளக்கி கூறினர்.சுமார் 30 நிமிடங்கள் அருங்காட்சியகத்தை அவர் ரசித்து பார்த்தார். இதன்பின்பு, அங்கிருந்த மாணவ-மாணவி களுடன் மு.க.ஸ்டாலின்கலந்துரையாடினார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேகர்பாபு, உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் எஸ்.கே. பிரபாகர், போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை நகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜுவால், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஏ.கே.விஸ்வநாதன், தமிழ்நாடு காவல் உயர்பயிற்சியக இயக்குனர் அமல்ராஜ் மற்றும் காவல்துறை, அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

அருங்காட்சியகம்

போலீஸ் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ள சென்னை எழும்பூர் பழைய போலீஸ் கமிஷனர் அலுவலக கட்டிடம் 180 ஆண்டுகள் பழமையானதாகும்.1842-ம் ஆண்டு வரை சென்னை வேப்பேரியில்தான் போலீஸ் கமிஷனர் அலுவலகம் செயல்பட்டு வந்தது. இதன்பின்பு, எழும்பூர் பாந்தியன் ரோட்டில் பங்களா போன்ற கட்டிடத்துக்கு (தற்போதைய போலீஸ் அருங்காட்சியக கட்டிடம்) மாற்றப்பட்டது.36 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட அந்த கட்டிடம் அருணகிரி முதலியார் என்பவருக்கு சொந்தமானது. ஆரம்பத்தில் 165 ரூபாய் வாடகையில் அந்த கட்டிடத்தில் கமிஷனர் அலுவலகம் செயல்பட்டது.

முதல் கமிஷனர்

1856-ம் ஆண்டு போலீஸ் சட்டம் இயற்றப்பட்ட பிறகு முதல் கமிஷனராக லெப்டினன்ட் கர்னல் போல்டர்சன் என்பவர் நியமிக்கப்பட்டார். இதன் பிறகு சில மாதங்கள் கழித்து அந்த பங்களாவை 21 ஆயிரம் ரூபாய்க்கு காவல்துறை வாங்கி சொந்தமாக்கியது.அதன்பிறகு, எழும்பூர் கமிஷனர் ஆபீஸ்' என்ற அடையாளத்துடன் அந்த கட்டிடம் இருந்து வந்தது. இந்தநிலையில் இட நெருக்கடி காரணமாக 2013-ம் ஆண்டு சென்னை வேப்பேரி ஈ.வெ.கி.சம்பத் சாலையில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்துக்கு கமிஷனர் அலுவலகம் மாற்றப்பட்டது.இதன்பிறகு, எழும்பூர் கமிஷனர் ஆபீஸ் என்ற அடையாளம் பழைய கமிஷனர் ஆபீஸ் என மாறத்தொடங்கி முற்றிலுமாக களையிழந்து காணப்பட்டது. தற்போது அந்த கட்டிடம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட்டு ரூ.6 கோடி செலவில் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.

வரலாற்று பெட்டகம்

இந்த அருங்காட்சியகம் தமிழக காவல்துறையின் பெருமையை பறைசாற்றும் வரலாற்று பெட்டகமாக உருவாக்கப்பட்டு உள்ளது.150 ஆண்டுகளுக்கு முன்பு காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகள், குண்டுகள், சிறியரக பீரங்கிகள் அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.வெளிமாநிலங்களில் போலீசார் பயன்படுத்திய உடைகள், பிஸ்டல், ரிவால்வர் போன்ற துப்பாக்கிகளும், ஏ.கே.47 ரக துப்பாக்கிகளும் அருங்காட்சியகத்தில் இடம்பெற்று காவல்துறையின் வீரத்தை பறைசாற்றுகின்றன.

கேமராக்கள்-கைவிலங்குகள்

காவல்துறையில் இசைக்குழு தனியாக செயல்பட்டு வருகிறது. இந்த இசைக்குழுவில் இடம்பெற்ற பழமையான இசைக்கருவிகள், காவல்துறையில் பயன்படுத்தப்பட்ட பழைய கேமராக்கள், வாக்கி டாக்கிகள், கைதிகளுக்கு போடப்பட்ட பல்வேறு வகையான கைவிலங்குகள், போலீசார் பயன்படுத்திய சைக்கிள், பழமையான ரோந்து வாகனங்கள் ஆகியவையும் போலீசாரின் பெருமையை உணர்த்தும் வகையில் இடம்பெற்றுள்ளன.1799-ம் ஆண்டு கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட சம்பவம் முதல் 2015-ம் ஆண்டு சென்னையை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கு வரையும், தற்போது நம்மை அச்சுறுத்தி வரும் கொரோனா வரை போலீசாரின் பங்களிப்பு குறித்த அத்தனை சம்பவங்களும் நினைவுச்சின்னங்களாக தொகுக்கப்பட்டுள்ளன.

பழைய சம்பவங்கள்

1965-ம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டம், 1972-ம் ஆண்டு நடைபெற்ற எல்.ஐ.சி. கட்டிட தீவிபத்து, 1982-ம் ஆண்டில் சென்னை பாண்டிபஜாரில் நடந்த துப்பாக்கிசூடு உள்ளிட்டவையும் பழைய சம்பவங்களின் தொகுப்புகளாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.1991-ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு, 2004-ல் சந்தன மரக்கடத்தல் மன்னன் வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம், மவுலிவாக்கத்தில் 11 மாடி அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்தது உள்ளிட்ட சம்பவங்களும் முக்கிய நிகழ்வுகளாக இடம்பெற்றுள்ளன.மெரினா கடற்கரையில் அந்த காலத்தில் பயன்படுத்தப்பட்ட 4 சக்கர ரோந்து வாகனம், உயர் போலீஸ் அதிகாரிகள் பயன்படுத்திய பழங்கால சொகுசு வாகனம், குண்டு துளைக்காத கார் ஆகியவை அருங்காட்சியகத்தின் நுழைவு வாயிலில் பிரமாண்டமாக காட்சி அளிக்கின்றன.

வெடிகுண்டுகள்

1982-ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தலைவர் பிரபாகரன் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்ட புகைப்படம், வீரப்பன் சுட்டுக்கொல்லப்பட்ட போது போலீஸ் அதிகாரி விஜயகுமார், சக அதிகாரிகளுடன் கொண்டாட்டத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஆகியவையும் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.நாட்டு வெடிகுண்டு, பேட்டரி வெடிகுண்டு என பல்வேறு வகையான வெடிகுண்டுகள், சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை கண்டறிவதற்கு காவல்துறையில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள், அந்தக்காலம் முதல் தற்போது வரை போலீசார் பயன்படுத்தும் ஆயுதங்கள் இடம்பெற்றுள்ளன.

லாக்-அப் அறை

1939-ம் ஆண்டில் இருந்து போலீசாருக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள், போலீசால் மீட்கப்பட்ட பழங்கால வாள்கள், பழமையான சிலைகள் ஆகியவையும் அருங்காட்சியகத்தின் பெருமையாக மிளிர்கின்றன.கோவை தொண்டாமுத்தூர் போலீஸ் நிலையத்தில் 1914-ம் ஆண்டு அமைக்கப்பட்ட லாக்-அப்' அறை சேதமடைந்ததை தொடர்ந்து அங்கு பயன்பாட்டில் இருந்த கற்கள், கம்பிகளை கொண்டு அருங்காட்சியகத்தில் லாக்-அப்' அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.பார்வையாளர்கள் இந்த 'லாக்-அப்' அறைக்குள் சென்று உள்ளே இருந்தபடி புகைப்படம் எடுத்துக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எழும்பூரின் புதிய அடையாளம்

இந்தி எதிர்ப்பு போராட்டத்தின்போது கைதாகி சிறையில் இருந்த முன்னாள் முதல்-அமைச்சர்கள் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் சிறையில் இருந்தபடி உருவாக்கிய இரும்பினாலான உடைகளை தொங்கவிடுவதற்காக பயன்படுத்தும் சாதனமும் அருங்காட்சியகத்தில் இடம்பெற்று இருந்தது.சுதந்திரத்திற்கு முன்பு தொடங்கி தற்போது வரை போலீசாரின் முழுமையான வரலாற்றை இன்றைய இளம்தலைமுறையினர் தெரிந்து கொண்டு பயன் அடையும் வகையில் இந்த அருங்காட்சியகம் உருவாகி இருக்கிறது.

இதன்மூலம் எழும்பூரின் புதிய அடையாளமாக போலீஸ் அருங்காட்சியகம் மிளிர்கிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com