3 கடைகளின் பூட்டை உடைத்து பணம், திண்பண்டங்கள் திருட்டு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி பகுதியில் நள்ளிரவில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1,500 ரொக்கப் பணம், ரூ.1,000 மதிப்புள்ள மிட்டாய் பாக்ஸ்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே நள்ளிரவில், மர்ம நபர்கள் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டுகளை உடைத்து, ரொக்கப் பணம் மற்றும் மிட்டாய் பெட்டிகளைத் திருடிச் சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பணம், மிட்டாய் பாக்ஸ்கள் திருட்டு:

தூத்துக்குடி மாவட்டம் கூட்டாம்புளி வேதகோவில் தெருவைச் சேர்ந்தவர் பால்ராஜ் (வயது 44). இவர் அப்பகுதியில் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த 18ம் தேதி வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் நள்ளிரவில் அங்கே வந்த மர்ம நபர்கள் இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.1,500 ரொக்கப் பணம் மற்றும் ரூ.1,000 மதிப்புள்ள மிட்டாய் பாக்ஸ்களை திருடிச் சென்றுள்ளனர்.

பணம், திண்பண்டங்கள் திருட்டு:

இதனைத் தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த சதீஷ்(30) என்பவரது கடையின் பூட்டையும் அந்த மர்ம நபர்கள் உடைத்துள்ளனர். அங்கிருந்து ரூ.300 ரொக்கப் பணம் மற்றும் ரூ.1,000 மதிப்புள்ள ஸ்நாக்ஸ் மற்றும் திண்பண்டங்களைத் திருடியுள்ளனர். அதே நள்ளிரவில் கூட்டாம்புளியைச் சேர்ந்த ஆத்திமுத்து(45) என்பவரது கடையின் பூட்டையும் அந்த மர்ம கும்பல் உடைத்துள்ளது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்தக் கடையில் இருந்து எந்தப் பொருட்களும், பணமும் திருடப்படவில்லை. பூட்டு மட்டும் உடைக்கப்பட்ட நிலையில் கொள்ளை முயற்சி அளவோடு நிறுத்தப்பட்டுள்ளது.

மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு:

இந்த நிலையில் அடுத்த நாள் காலையில் கடைகளைத் திறக்க வந்த உரிமையாளர்கள், பூட்டுகள் உடைக்கப்பட்டு திருடு போயிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களிடம் விபரங்களைக் கேட்டறிந்து, தொடர் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com