

திருநெல்வேலி மாவட்டம், இட்டமொழி அருகே நள்ளிரவில் மின்சாரத்தைத் துண்டித்து, 2 மின்மாற்றிகளை மர்ம கும்பல் துணிகரமாகத் திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வழக்கமாகத் தோட்டங்களில் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டு மின்கம்பிகளை மட்டும் மர்ம நபர்கள் திருடிச் செல்வது வழக்கம். ஆனால் இட்டமொழியில் மின்சாரத்தைத் துண்டித்துவிட்டு 2 மின்மாற்றிகளையே (Transformers) கும்பல் ஒன்று திருடிச் சென்றுள்ளது.
இட்டமொழி பகுதியில் விவசாய நிலங்களுக்கு மின் விநியோகம் செய்வதற்காக இலங்கையாடிகுளம் மற்றும் ஒத்தவீடு வேலாயுதபுரம் காட்டுப்பகுதியில் உள்ள மின்கம்பங்களில் மின்மாற்றிகள் நிறுவப்பட்டிருந்தன. சம்பவத்தன்று இரவு வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், மின்கம்பத்தில் ஏறி மின் இணைப்பைத் துண்டித்துள்ளனர். பின்னர் மின்மாற்றிகளைக் கயிறு கட்டி கீழே இறக்கி, வாகனத்தில் ஏற்றித் திருடிச் சென்றுள்ளனர்.
மறுநாள் காலையில் தோட்டங்களுக்குச் சென்ற விவசாயிகள், மின் விநியோகம் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மின்வாரிய ஊழியர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஊழியர்கள் அங்கு சென்று ஆய்வு செய்தபோது, 2 இடங்களில் மின்மாற்றிகள் திருடு போனது உறுதி செய்யப்பட்டது.
இலங்கையாடிகுளம் அருகே மின்மாற்றிகளைக் கயிறு கட்டி இழுத்துச் சென்ற தடயங்கள் அங்குப் பதிவாகியிருந்தன. இந்தப் பகுதிக்கு அருகிலேயே திருச்செந்தூர்-வள்ளியூர் பிரதான சாலை அமைந்துள்ள நிலையில், நள்ளிரவில் இத்தகைய துணிகரத் திருட்டு நடைபெற்றுள்ளது.
இது தொடர்பாக இட்டமொழி இளநிலை மின்வாரியப் பொறியாளர் சங்கீதா, திசையன்விளை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் எழில் சுரேஷ்சிங் வழக்குப்பதிவு செய்து, மின்மாற்றிகளைத் திருடிச் சென்ற மர்ம கும்பலை போலீசார் தீவிரமாக வலைவீசித் தேடி வருகின்றனர்.