சென்னை வரும் சசிகலாவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்த போலீஸ் அனுமதி: டி.டி.வி. தினகரன் தகவல்

சென்னை வரும் சசிகலாவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்த போலீஸ் அனுமதி அளித்து உள்ளது என டி.டி.வி. தினகரன் தெரிவித்து உள்ளார்.
சென்னை வரும் சசிகலாவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்த போலீஸ் அனுமதி: டி.டி.வி. தினகரன் தகவல்
Published on

சென்னை,

சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைதண்டனை நிறைவடைந்து கடந்த 27 ஆம் தேதி சசிகலா விடுதலையான நிலையில், நாளை மறுநாள் அவர் சென்னை வர உள்ளார். சசிகலாவை வரவேற்பதற்காக அமமுக கட்சியினர் தீவிர ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். சசிகலா வருகையை முன்னிட்டு அதிமுக நிர்வாகிகள் பலர் வாழ்த்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். சசிகலா நாளை மறுநாள் வரும் போது, சென்னையில் பேரணி நடத்த அ.ம.மு.க. திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

இதுதொடர்பாக முன்னாள் அமைச்சரும், அ.ம.மு.க. துணை பொதுச்செயலாளருமான செந்தமிழன் சார்பில், சென்னையில் போரூர் முதல் 12 இடங்களில் சசிகலாவுக்கு வரவேற்பு அளிக்கவும், பேரணி நடத்தவும் அனுமதி கேட்டு சென்னை காவல் துறையில் மனு அளிக்கப்பட்டது. சசிகலா தலைமையில் நடத்தப்படும் பேரணியில் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா நினைவிடம் வரை சசிகலா தலைமையில் பேரணி செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனுவை பரிசீலித்து சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டு உள்ள செய்தியில், சென்னை வரும் சசிகலாவுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்த போலீஸ் அனுமதி அளித்து உள்ளது.

தமிழக எல்லையான அத்திப்பள்ளி முதல் சென்னை இல்லம் வரை வரவேற்பை கவனத்துடன் அமைத்து கொள்ள வேண்டும்.

போக்குவரத்துக்கோ, பொதுமக்களுக்கோ எவ்வித இடையூறும் இல்லாமல் வரவேற்பு நடத்தப்பட வேண்டும். சசிகலா தமிழகம் வரும் நாளை மக்கள் மகிழ்ந்து கொண்டாடும் நாளாக மாற்றிடுவோம் என தெரிவித்து உள்ளார்.

எனினும், சசிகலா வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனுமதி தருவது பரிசீலனையில் உள்ளது என சென்னை காவல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com