விஜய்க்கு எதிராக மிகப்பெரிய சதி செய்த போலீசார்; வக்கீல் பரபரப்பு பேட்டி

ஐகோர்ட்டு அனுமதி வழங்கினால் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற விஜய் தயாராக உள்ளார்.
விஜய்க்கு எதிராக மிகப்பெரிய சதி செய்த போலீசார்; வக்கீல் பரபரப்பு பேட்டி
Published on

மதுரை,

கரூரில் தமிழக வெற்றிக்கழகத்தின் பிரசார கூட்டம் கடந்த 27-ந்தேதி நடந்தது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உள்பட 41 பேர் உயிரிழந்தனர்.

இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரிக்கவும், பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்களை சந்திக்க நடிகர் விஜய் உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகளுக்கு அனுமதி வழங்கவும், சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாக்கவும் உத்தரவிடக்கோரி அந்த கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா சார்பில் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவும் கோரி அக்கட்சியின் வக்கீல் அறிவழகன் சார்பில் மதுரை ஐகோர்ட்டு பதிவுத்துறையிடம் அனுமதி கோரப்பட்டது. இதற்காக, த.வெ.க.வினர் இன்று வழக்கு தாக்கல் செய்ய உள்ளனர்.

இதுபற்றி த.வெ.க. வக்கீல் அறிவழகன் நிருபர்களிடம் கூறும்போது, த.வெ.க. தலைவர் விஜய் கடந்த 27-ந்தேதி கரூரில் பிரசாரம் செய்தபோது போலீசார் போக்குவரத்தை கட்டுப்படுத்தவில்லை. பாதுகாப்புக்கு போதுமான போலீசாரையும் நியமிக்கவில்லை. இதனை பயன்படுத்தி கொண்ட தி.மு.க. முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்கள் விஜய்க்கு எதிராகவும், த.வெ.க.வுக்கு எதிராகவும் மிகப்பெரிய சதித்திட்டம் தீட்டி செயல்படுத்தினர். இதனால் கரூர் சம்பவம் பற்றி மாநில காவல்துறை விசாரிக்கக்கூடாது. சி.பி.ஐ.தான் விசாரிக்க வேண்டும் என்று கேட்டு எங்கள் கட்சி சார்பில் மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்படும்.

கரூர் கூட்டத்தில் போலீசாரும் குழப்பம் ஏற்படுத்தினர். இதுவரை த.வெ.க. சார்பில் நடந்த எந்த கூட்டத்திலும் இதுபோல இல்லை. தி.மு.க.வினரின் சதித்திட்டம் காரணமாக கரூரில் 41 பேர் உயிரிழந்து உள்ளனர்.

இதுதொடர்பான ஆதாரங்களை கோர்ட்டில் தாக்கல் செய்வோம். ஐகோர்ட்டு அனுமதி வழங்கினால் கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூற விஜய் தயாராக உள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக அமைத்துள்ள ஒரு நபர் விசாரணை ஆணையம் என்பது பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து அவர்களுடைய பிரச்சினைகளை கேட்கும். புலன் விசாரணை நடத்த முடியாது. புலன் விசாரணை நடத்தினால்தான் யார் சதித்திட்டத்தில் ஈடுபட்டது என கண்டுபிடிக்க முடியும்.

அந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி குறித்து பேசிய உடன் விஜய் மீது செருப்பு வீசப்பட்டது. அதன் பிறகே நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இந்த சதித்திட்டத்தை செயல்படுத்திய அனைவரையும் தண்டிக்க வேண்டும். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அளிக்கும் விளக்கமானது, தங்களின் பொறுப்பை தட்டிக்கழிப்பது போல உள்ளது.

பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் கடமையில் இருந்து அரசு விலகி சென்றுள்ளது. த.வெ.க.வினர், போலீசாரின் நிபந்தனைகளை மீறவில்லை. உயிரிழந்தவர்களின் உடல்களை இரவில் உடனுக்குடன் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? மருத்துவமனையில் ஏற்கனவே இறந்தவர்களின் உடல்கள் இந்த விபத்தில் இறந்தவர்களின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதா? என்ற சந்தேகமும் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com