சீமான் வீட்டில் சம்மன் ஒட்டிய போலீசார்.... கிழித்து எறிந்த நாதக நிர்வாகி கைது

நடிகை விஜயலட்சுமி வழக்கு தொடர்பாக சீமான் வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டினர்.
சீமான் வீட்டில் சம்மன் ஒட்டிய போலீசார்.... கிழித்து எறிந்த நாதக நிர்வாகி கைது
Published on

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி உடலுறவு வைத்துக்கொண்டு பின்னர் ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்தார். அதன்பேரில் சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த 17-ந்தேதி விசாரித்த நீதிபதி, கற்பழிப்பு வழக்கை ரத்து செய்ய முடியாது என்றும், இந்த வழக்கை 12 வாரத்துக்குள் போலீசார் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். அதன்பேரில் வளசரவாக்கம் போலீசார் இந்த வழக்கில் மீண்டும் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு ஆஜராக கோரி சீமானுக்கு போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் அவரது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சங்கர், சீமான் ஆஜராக 4 வாரம் அவகாசம் வேண்டும் எனக் கோரி போலீஸ் நிலையத்தில் கடிதம் அளித்தார்.

இந்த நிலையில், நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் வழக்கில், நாளை காலை 11 மணி அளவில் சென்னை வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் சீமான் ஆஜராக வேண்டும் என கூறி சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது வீட்டில் போலீசார் சம்மன் ஒட்டியுள்ளனர். விசாரணைக்கு ஒத்துழைக்காவிட்டால் கைது செய்ய நேரிடும் எனவும் சம்மன் மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சம்மன் ஒட்டப்பட்ட சில நிமிடங்களில், சீமான் வீட்டிலிருந்து வெளியே வந்த நாதக நிர்வாகி ஒருவர் சம்மனை கிழித்து எறிந்தார். இதனையைடுத்து போலீசார் வீட்டிற்குள் சென்று அந்த நபர் குறித்து விசாரிக்க சென்றனர். அப்போது அங்கு இருந்த சீமானின் காவலாளி போலீசாரை தடுத்து நிறுத்தி வாக்குவாதம் செய்தார். மேலும் அவர் போலீசாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் காவலாளியை போலீசார் குண்டுக் கட்டாக கைது செய்து அழைத்து சென்றனர். மேலும் சம்மனை கிழித்த நபரையும் போலீசார் கைது செய்தனர்.

இதனை தொடர்ந்து சீமான் வீட்டில் நடந்த சலசலப்புக்கு அவரது மனைவி போலீசாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com