கோவையில் போலீசார் அதிரடி சோதனை: போதைப்பொருட்கள் வைத்திருந்த 28 பேர் கைது

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 2 டன் புகையிலை பொருட்கள், 10 கிலோ கஞ்சா, 50 கஞ்சா சாக்லெட், 300 போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கைது
Published on

கோவை,

கோவை மாநகர பகுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் போலீஸ் கமிஷனர் கண்ணன் உத்தரவின்பேரில் மாநகர பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் தங்கும் தனியார் விடுதிகள், கூரியர் அலுவலகங்கள், குடோன்கள், தனியார் ஆம்னி பஸ்களின் அலுவலகங்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனை

இந்த சோதனை நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று காலை வரை நடைபெற்றது. 500-க்கும் மேற்பட்ட போலீசார் இந்த அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் சரித்திர பதிவேடு குற்றவாளிகள், மாநகரை விட்டு வெளியேற்றப்பட்ட ரவுடிகளின் நடவடிக்கை குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வில் ஏராளமான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல்

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, கோவை மாநகர பகுதியில் நடத்தப்பட்ட ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 2 டன் புகையிலை பொருட்கள், 10 கிலோ கஞ்சா, 50 கஞ்சா சாக்லெட், 300 போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 24 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 28 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுதவிர கோவை மாநகரை விட்டு வெளியேற்றிய சண்முகம் என்ற ரவுடியும் கைது செய்யப்பட்டார். இந்த சோதனை தொடர்ந்து நடத்தப்படும் என்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com