

சென்னை,
சென்னையின் பல்வேறு பகுதிகளில் இன்று போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் போதை மாத்திரைகள் வைத்திருந்த 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் போதைப்பொருள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், போலீசார் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை முதல் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஓ.எம்.ஆர், ஈ.சி.ஆர், சோழிங்கநல்லூர், செம்மஞ்சேரி மற்றும் கண்ணகி நகர் உள்ளிட்ட 10 முக்கிய இடங்களில் தனிப்படை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
கண்ணகி நகர் குடியிருப்புப் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது, சிலர் வீடுகளில் தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களைப் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை போலீசார் உடனடியாக பறிமுதல் செய்தனர்.
இந்த போதைப்பொருள் பதுக்கல் மற்றும் விற்பனை தொடர்பாக 5 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களுக்கு இந்த போதை மாத்திரைகள் எங்கிருந்து கிடைத்தன, இதன் பின்னணியில் உள்ள முக்கியக் குற்றவாளிகள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.