த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசார பஸ் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு


த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசார பஸ் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு
x

இருசக்கர வாகனம் மீது மோதியது தொடர்பாக வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர்,

கரூரில் த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்த சூழ்நிலையில் அரசியல் கட்சிகள் நடத்தும் ‘ரோடு ஷோ'வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க வேண்டும், அதுவரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ‘ரோடு ஷோ’ நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் என்று சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.செந்தில்குமார் முன்னிலையில் நேற்று முன் தினம் விசாரணைக்கு வந்தது. தொடர்ந்து நடந்த விசாரணையின்போது நீதிபதி, ‘இந்த சம்பவத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாக தெரிவித்தார். பின்னர், ‘கரூர் சம்பவம் தொடர்பான வீடியோக்களை பார்க்கும் போது வேதனை அளிக்கிறது. இந்த வழக்கில் த.வெ.க.வைச் சேர்ந்த 2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டு உள்ளனர். ஓரிரு நிபந்தனைகளை தவிர பெரும்பாலான நிபந்தனைகள் மீறப்பட்டு உள்ளதாகவே தெரிகிறது. கரூர் பிரசாரத்துக்கு சென்றபோது விஜய் பயணித்த பஸ் மோதி ஒரு விபத்து ஏற்பட்டதாக வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக தனியாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்பட்டு உள்ளதா?.

வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு என்ன தயக்கம்?. இந்த விவகாரத்தில் வழக்குப்பதிவு செய்யாவிட்டால் போலீசாரை மக்கள் எப்படி நம்புவார்கள்?. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களுக்கு போலீசார் கருணை காட்டுவதை ஏற்க முடியாது. விபத்து தொடர்பாக தனியாக வழக்குப்பதிவு செய்து, பிரசார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா?' என்றார். பின்னர், ‘இந்த விவகாரத்தை கோர்ட்டு கண்மூடி வேடிக்கை பார்த்து கொண்டிருக்காது' என நீதிபதி கண்டனம் தெரிவித்தார். ‘கலவரம் நடப்பது போல் நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். அனைத்தையும் காவல்துறை அனுமதித்துள்ளது' எனக்கூறி அதிருப்தியை வெளிப்படுத்திய நீதிபதி, ‘இந்த வழக்கில் காவல்துறை தரப்பில் வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது?’ என கேள்வி எழுப்பி இருந்தார்.

இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசார வாகனத்தை பறிமுதல் செய்ய போலீசார் திட்டமிட்டிருந்தனர். இதன்படி பனையூரில் உள்ள த.வெ.க. அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பிரசார வாகனத்தை எந்த நேரத்திலும் போலீசார் பறிமுதல் செய்வார்கள் என்று தகவல் வெளியாகி இருந்தது. இதற்கான நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர். அதற்கான ஆவணங்களையும், வீடியோ பதிவுகளையும் போலீசார் சேகரித்து வருகின்றனர்.

இந்நிலையில் த.வெ.க. தலைவர் விஜய்யின் பிரசார பஸ் மற்றும் அதன் ஓட்டுநர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஐகோர்ட்டின் உத்தரவை அடுத்து, இருசக்கர வாகனம் மீது மோதியது தொடர்பாக விஜய்யின் பிரசார பஸ் மற்றும் அதன் ஓட்டுநர் மீதும், இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற இருவர் மீதும், BNS 281 பிரிவில் மனித உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் அல்லது மற்றவர்களுக்கு காயம் ஏற்படுத்தும் வகையில் அவசரமாக வாகனம் ஓட்டியதாக கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

1 More update

Next Story