மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்ல முயன்ற சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பிய போலீசார்

புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்ல முயன்ற சுற்றுலா பயணிகளை போலீசார் திருப்பி அனுப்பினர்.
மாமல்லபுரம் கடற்கரைக்கு செல்ல முயன்ற சுற்றுலா பயணிகளை திருப்பி அனுப்பிய போலீசார்
Published on

சென்னை,

உருமாற்றம் பெற்ற புதிய கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் புத்தாண்டையொட்டி கடற்கரையில் கூட்டம் கூடவும், கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

நேற்று மாமல்லபுரம் வந்த சுற்றுலா பயணிகள் பலர் கடற்கரைக்கு செல்ல முயன்றனர். கடற்கரைக்கு செல்லும் நுழைவு வாயில் பாதையில் தடுப்புகள் அமைத்து யாரும் கடலுக்கு செல்லாத வகையில் மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் மேற்பார்வையில், மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன் தலைமையில் போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள்கடற்கரைக்கு செல்ல முயன்றனர். அவர்களை தடுத்து நிறுத்தி கடற்கரைக்கு செல்ல அனுமதியில்லை என்று கூறி, புராதன சின்னங்களை மட்டும் கண்டு களித்துவிட்டு செல்லுமாறு வலியறுத்தி போலீசார் திருப்பி அனுப்பினர்.

புராதன சின்னங்களை கண்டுகளிக்க கட்டண கவுண்ட்டர்களில் நுழைவு சீட்டு வழங்கப்படவில்லை. ஆன்லைன் மூலம் நுழைவு சீட்டு பதிவு செய்த பயணிகள் மட்டும் புராதன சின்னங்களை கண்டுகளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இதனால் கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட பகுதிகளில் நுழைவு வாயிலில் உள்ள கியூ-ஆர் கோட்டில் செல்போன் மூலம் நுழைவு சீட்டை பதிவு செய்த பின்னர் செல்போனில் பதிவாகியிருந்த ஆன்லைன் டிக்கெட்டுகளை புராதன சின்ன நுழைவு வாயிலில் உள்ள தொல்லியல் துறை பணியாளர்களிடம் காண்பித்து புராதன சின்னங்களை கண்டுகளித்து விட்டு சுற்றுலா பயணிகள் வீடு திரும்பினர்.

ஐந்துரதம் பகுதி வழியாக சுற்றுலா பயணிகள் சிலர் கடற்கரை பகுதிக்கு வந்தனர். அவர்களை அங்கு ரோந்து சுற்றிக் கொண்டிருந்த போலீசார் எச்சரித்து வந்த வழியாக திருப்பி அனுப்பினர். சுற்றுலா பயணிகள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டதால் கடற்கரையில் உள்ள பெட்டி கடைகள், நடைபாதை கடைகள் மூடப்பட்டு இருந்தன. குதிரை சவாரி நடத்தி வாழ்வாதாரம் ஈட்டி வருபவர்களும் புத்தாண்டு கொண்டாட்ட தடை காரணமாக வருமானம் இன்றி கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட தடை, கடற்கரைக்கு செல்ல தடை உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டை போல் இல்லாமல் நேற்று குறைவான சுற்றுலா பயணிகளே மாமல்லபுரம் வந்திருந்தனர்.

கடற்கரைக்கு செல்ல முடியாததால் பலர் ஏமாற்றத்துடன் புராதன சின்னங்களை மட்டும் பார்த்து விட்டு சென்றதை காண முடிந்தது. பொதுமக்கள், பயணிகள் நடமாட்டம் இன்றி ஒரு மயானம் போல் மாமல்லபுரம் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. கடல் அலைகளின் சத்தம் மட்டுமே காதில் ஒலித்தது. மக்கள் நடமாட்டம் இன்றி போலீசார் மட்டுமே கடற்கரையில் ரோந்து வந்து கொண்டிருந்தனர்.

மோட்டார் சைக்கிளில் வந்த பயணிகளால் மாமல்லபுரம் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் பஸ் நிலையம் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் மாமல்லபுரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வமூர்த்தி தலைமையில் போக்குவரத்து போலீசார் வாகன நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சுற்றுலா வாகனங்கள் ஒன்றன்பின், ஒன்றாக செல்லும் வகையில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com