சோழிங்கநல்லூரில் பச்சிளம் குழந்தையை கழிவறையில் வீசி சென்ற பெண்: போலீசார் மீட்டு காப்பாற்றினர்

குழந்தையை உடனடியாக மீட்ட போலீசார் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்து காப்பாற்றினர்
சோழிங்கநல்லூரில் பச்சிளம் குழந்தையை கழிவறையில் வீசி சென்ற பெண்: போலீசார் மீட்டு காப்பாற்றினர்
Published on

சென்னை,

பழைய மாமல்லபுரம் சாலை சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணை எதிரே சென்னை மாநகராட்சி பொது கழிவறையில் பிறந்து சுமார் சில நிமிடங்களான பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடியுடன் இருப்பதாக நேற்று முன்தினம் இரவு தூய்மை பணியில் ஈடுபட்டிருந்த சென்னை கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த தூய்மை பணியாளர் பர்வீனா (வயது 65) தன்னுடன் பணிபுரியும் பெரும்பாக்கத்தை சேர்ந்த ஜீவா, செம்மஞ்சேரியை சேர்ந்த காமாட்சி ஆகியோரிடம் தெரிவித்தார். உடனடியாக துப்புரவு மேற்பார்வையாளர் உதவியுடன் செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தூய்மை பணியாளர்கள் உதவியுடன் கழிவறையில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த ஆண் குழந்தையை மீட்ட போலீசார் உடனடியாக போலீஸ் வாகனத்தில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்து காப்பாற்றினர்.

பின்னர் வென்டிலேட்டருடன் கூடிய குழந்தைகள் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு குழந்தையை வென்டிலேட்டரில் பாதுகாப்பாக வைத்து மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்தனர்.

செம்மஞ்சேரி போலீசார் உயிருக்கு போராடிய பச்சிளம் குழந்தையை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்று முதலுதவி அளித்து குழந்தையை காப்பாற்றிய சம்பவம் டாக்டர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கழிவறையில் பச்சிளம் குழந்தையை வீசி சென்ற பெண் யார்? என்பது குறித்து செம்மஞ்சேரி போலீசார் அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு விசாரித்து வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com