திருவொற்றியூரில் மேம்பாலத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வடமாநில வாலிபர் - உயிரை பணயம் வைத்து மீட்ட போலீசார்

மேம்பாலத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வடமாநில வாலிபரை போலீசார் உயிரை பணயம் வைத்து மீட்டனர்.
திருவொற்றியூரில் மேம்பாலத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வடமாநில வாலிபர் - உயிரை பணயம் வைத்து மீட்ட போலீசார்
Published on

சென்னை,

சென்னை திருவொற்றியூர் ரெயில் நிலையத்தில் உள்ள மேம்பாலத்தின் மீது வடமாநில வாலிபர் ஒருவர் ஏறி நின்று கொண்டு தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனைக் கண்ட பொதுமக்கள் அச்சமடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ரெயில்வே போலீசார், திருவொற்றியூர் சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அந்த நபர் வடமாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், அவரிடம் பேச்சு கொடுத்து கீழே இறங்க வைப்பதில் போலீசாருக்கு சிரமம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து இந்தி தெரிந்த ஒரு நபரை வரவழைத்து, அந்த வடமாநில வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வரை கீழே இறக்க போலீசார் முயன்றனர். ஆனால் அந்த வாலிபர் மேம்பாலத்தின் பக்கவாட்டில் இருக்கும் கம்பியில் உட்கார்ந்து கொண்டு சுமார் 3 மணி நேரமாக போலீசாருக்கு போக்கு காட்டி வந்தார்.

தொடர்ந்து அவரிடம் பேச்சு கொடுத்தபடியே, மறுபக்கம் போலீசார் கம்பி வழியாக மேலே ஏறி தங்கள் உயிரையும் பணயம் வைத்து ஒரு வழியாக அந்த வாலிபரை மீட்டனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த லட்சுமணன் என்பதும், அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிய வந்தது.

மேலும் அந்த நபர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் பேசுவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்த நபரை ரெயில்வே போலீசாரிடம் ஒப்படைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com