கள் விற்பனை புகார்: விவசாயியை துப்பாக்கியால் சுட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்; உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியில் கள் விற்பதாக வந்த புகார் குறித்து விசாரிக்க சென்ற போலீசாரை தாக்கிய விவசாயியை சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.
கள் விற்பனை புகார்: விவசாயியை துப்பாக்கியால் சுட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்; உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு
Published on

தென்காசி,

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் பகுதியில் உள்ள மருதம்புத்தூர் மேலத்தெருவைச் சேர்ந்தவர் பெருமாள் சேட். இவரது மகன் மணிகண்டன் (வயது 32). விவசாயியான இவர் பனையேறும் தொழிலாளியாகவும் உள்ளார். ஆலங்குளம் காவல் நிலையத்திற்கு மருதம்புத்தூர் பகுதியில் கள் விற்பனை செய்வதாக ரகசிய புகார் வந்தது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா மற்றும் 2 போலீசார் மருதம்புத்தூர் காட்டுப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு ஒரு பனைமரத்தில் பதநீர் எடுப்பதற்காக பானை வைக்கப்பட்டு இருந்தது. இதை பார்த்த போலீசார், மரத்தின் உரிமையாளரான மணிகண்டனின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் மணிகண்டன், அவரது தந்தை பெருமாள் சேட் ஆகியோரை அழைத்து கொண்டு பனைமரம் இருக்கும் பகுதிக்கு சென்றனர். இதை பார்த்த அவர்களின் உறவினர்களும் அங்கு திரண்டு வந்தனர். மணிகண்டனை பனை மரத்தின் மீது ஏறி பானையை எடுக்க போலீசார் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் மரத்தில் ஏறிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த சிலரை போலீசார் தரக்குறைவாக பேசியதாக தெரிகிறது. இதை கண்ட மணிகண்டன், சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது இசக்கிராஜா அருகில் கிடந்த மரக்கட்டையை கொண்டு அடிக்க ஓங்கியதாகவும், அதை மணிகண்டன் தடுத்தபோது அங்கு ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா தலையில் கட்டை பலமாக விழுந்தது. இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா தான் வைத்திருந்து துப்பாக்கியால் மணிகண்டனை நோக்கி 4 முறை சுட்டார். இதில் 2 குண்டுகள் அவரது கால்களில் பட்டு படுகாயம் ஏற்பட்டது. பின்னர் சக போலீசார், காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து மணிகண்டனின் உறவினர்களுக்கு தெரிய வரவே ஆலங்குளம்-முக்கூடல் சாலையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் அகில இந்திய காமராஜர் ஆதித்தனார் கழக பொதுச் செயலாளர் சிங் நாடார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். ஆலங்குளம் டி.எஸ்.பி. கிளாட்சன் ஜோஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சம்பந்தமே இல்லாமல் சாதாரண விவசாயி மீது துப்பாக்கி சூடு நடத்திய சப்-இன்ஸ்பெக்டர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com