தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவுக்கு போலீசார் சம்மன்

கோப்புப்படம்
தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
சென்னை,
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில் இந்த சம்பவத்திற்கு பின்னர் முதல்முறையாக த.வெ.க தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், “என் தாயின் இழப்புக்கு பின்னர் கரூரில் என்னுடைய குடும்பத்தில் 41 பேரின் உயிரிழப்பு மிகப்பெரிய வலியை கொடுத்திருக்கிறது. தற்போது எதையும் பேசக் கூடிய மனநிலையில் நான் இல்லை. இதை புரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன். விரைவில் கரூர் சென்று பொதுமக்களை சந்திப்போம். அவர்களுடன் மிகப்பெரிய பயணம் தொடரும்” என்று கூறி இருந்தார்.
இந்த சூழலில் த.வெ.க. தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா மீது சென்னை வடக்கு மண்டல சைபர் கிரைம் போலீசார் நேற்று வழக்கு ஒன்றை பதிவு செய்தனர். கரூர் சம்பவம் தொடர்பாக சமூக வலைதளங்களில் ஆதவ் அர்ஜுனா கருத்துகளை பதிவு செய்துள்ளார். அந்த கருத்துகளில் வன்முறையை தூண்டும் விதமாகவும், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பொது அமைதிக்கு பங்கம் எற்படுத்தும் விதமாகவும் உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் தவெக பரப்புரை பேருந்து கேமராவில் பதிவான காட்சிகளை ஒப்படைக்கக் கோரி அக்கட்சி தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. இதேபோல் தவெக துணைப்பொதுச் செயலாளர் நிர்மல் குமாருக்கும் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






