

சென்னை,
போலீஸ் கமிஷனர் அபின் தினேஷ் மோடக் உத்தரவின்பேரில், சென்னையில் உள்ள 12 காவல் மாவட்டங்களிலும் அந்தந்த துணை கமிஷனர்களின் தலைமையில் சென்னை முழுவதும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் சட்டவிரோதமாக பார்கள் நடத்தியதாகவும், மது பாட்டில்களை பதுக்கி வைத்து சில்லரை விற்பனையில் ஈடுபட்டதாகவும் மொத்தம் 16 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 500 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
வேளச்சேரி 100 அடி சாலையில் சட்டவிரோதமாக நடந்த பார் மூடப்பட்டது. அந்த பாரின் ஊழியர்கள் பிரபாகரன் (வயது 32), சபரிமுத்து (27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதுபோல திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக செயல்பட்ட பார் மூடப்பட்டது. இதுதொடர்பாக பார் ஊழியர்கள் கார்த்திக் (36), பிரபாகரன் (40), கணேசா (61) வாஞ்சி நாதன் (43) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
திருவொற்றியூர் எண்ணூர் எக்ஸ்பிரஸ் சாலை டாஸ்மாக் கடை அருகே சில்லரையாக மதுபாட்டில் விற்பனையில் ஈடுபட்ட நீதி (38) என்பவர் கைதானார். திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே சில்லரையாக மதுபாட்டில்களை விற்றதாக ராஜபாண்டி (42), ரகுபதி (38), லட்சுமணன் (46) ஆகியோர் கைதானார்கள். சென்னை கொண்டித்தோப்பு அம்மன்கோவில் தெருவில் சட்டவிரோதமாக செயல்பட்ட பார் மூடப்பட்டது. அங்கு வேலை பார்த்த மாரியப்பன் (65) என்பவர் கைதானார்.
பிராட்வே தபால் அலுவலகம் சாலையில் சட்டவிரோதமாக செயல்பட்ட மதுபார் மூடப்பட்டு, ஊழியர் ரகு (32) என்பவர் கைது செய்யப்பட்டார். புது வண்ணாரப்பேட்டை பாலகிருஷ்ணன் தெருவில் செயல்பட்ட சட்டவிரோத பார் மூடப்பட்டு, ஊழியர் அமுல்ராஜ் (60) என்பவர் கைது செய்யப்பட்டார்.
புதுவண்ணாரப்பேட்டை பாரதியார் நகர் பகுதியில் உள்ள சட்டவிரோத பார் மூடப்பட்டு. ஊழியர் ராஜமாணிக்கம் (57) என்பவர் கைதானார். நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலையில் செயல்பட்ட தனியார் மதுபாரை ஆய்வு செய்தபோது அரசு நிர்ணயித்த நேரத்தை தாண்டி அங்கு மது விற்பனை நடந்தது தெரியவந்தது. அந்த பாரின் உரிமையாளர் கார்த்திக் இளம்பழுதி, மேலாளர் ஸ்டாலின் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த மதுபார் மூடப்பட்டது.
சென்னை நகர எல்லைக்குள் சட்டவிரோதமாக மதுபார் நடத்துவோர்கள் மீதும், சில்லரையாக மதுபாட்டில்கள் விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடர்ந்து கண்காணிக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.