

புதுக்கோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் வல்லத்திராக்கோட்டை அருகே ஆயுள் தண்டனை கைதியை சிறைக்கு அழைத்துச் சென்ற காவல் வாகனம் விபத்துக்குள்ளானது.
திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதி புரோஸ்கான்(வயது 45), அவரது தாயின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக பரோலில் சென்றிருந்தார். இறுதிச்சடங்கு முடிந்த பின்னர் புரோஸ்கானை போலீசார் காவல் வாகனத்தில் மீண்டும் சிறைக்கு அழைத்துச் சென்றனர்.
அவர்கள் நள்ளிரவில் அறந்தாங்கி-புதுக்கோட்டை சாலையில் முத்துப்பட்டினம் பகுதியில் அருகே வந்தபோது, காவல் வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மளிகைக் கடை மற்றும் வீட்டின் சுவரில் மோதி விபத்திற்குள்ளானது.
இந்த விபத்தில் ஓட்டுநர் ஜெகதீசன், சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன், காவலர்கள் சிவசங்கர பாண்டி, பொன்வளவன் மற்றும் கைதி புரோஸ்கான் ஆகிய 5 பேரும் காயமடைந்தனர். அனைவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து வல்லத்திராக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.