இலவச திரைப்படங்கள் வழங்கும் அங்கீகாரமற்ற செயலிகளை பயன்படுத்தாதீங்க: போலீசார் எச்சரிக்கை

சட்டப்பூர்வமான அங்கீகாரம் இல்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்தல், பகிர்தல் அல்லது பயன்படுத்துதல் சட விரோதமான செயலாகும்.
Image Credits: Grok AI
Image Credits: Grok AI
Published on

சென்னை,

தமிழக ‘சைபர் கிரைம்’ போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இலவச திரைப்படங்கள், வெப்சீரிஸ், இலவச ஓ.டி.டி. சேவைகள் வழங்குவதாக கூறி இயங்கும் அங்கீகாரமற்ற திரைப்பட மற்றும் ஸ்ட்ரீமிங் செயலிகளை பயன்படுத்த வேண்டாம். அங்கீகாரமற்ற செயலிகளை மூன்றாம் தரப்பு இணையதளங்களில் மூலம் பகிரப்படுகின்றன. இவற்றை நிறுவும்போது செல்போன் சாதனங்களில் அடிப்படையாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்கள் செயலிழக்க செய்யப்படுகின்ற காரணத்தால் இதனை பயன்படுத்துபவர்கள் கடுமையான சைபர் சட்டத்தின் கீழ் நடவடிக்கைகளுக்கு ஆளாகின்றனர். இத்தகைய சட்டப்பூர்வமான அங்கீகாரம் இல்லாத செயலிகளை பயன்படுத்துவதன் மூலம் பயனாளர்களின் தொலைபேசியில் சேமிக்கப்பட்டுள்ள தொடர்புகள், புகைப்படங்கள், செய்திகள் போன்ற தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது.

இவ்வாறு திருடப்பட்ட தகவல்களை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் டிஜிட்டல் கைது, போலி முதலீட்டு, போலி வேலைவாய்ப்பு போன்ற மோசடி குற்றச்செயல்களை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. மேலும் வங்கி மற்றும் நிதி தொடர்பான விவரங்கள் திருடப்பட்டால் பண இழப்பு ஏற்படும் அபாயமும் உள்ளது. சட்டப்பூர்வமான அங்கீகாரம் இல்லாத செயலிகளை பதிவிறக்கம் செய்தல், பகிர்தல் அல்லது பயன்படுத்துதல் சட விரோதமான செயலாகும். இதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது. நம்பகமற்ற பாப் அப் விளம்பரங்களை கிளிக் செய்யாதீர்கள். கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து அதிகாரப்பூர்வ ஓடிடி தளங்களை மட்டும் பயன்படுத்தவும். இணையவழி குற்றத்தில் பாதிக்கப்பட்டிருந்தால் 1930 என்ற தொலைபேசி எண் அல்லது www.cybercrime.gov.in-ல் புகாரளிக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com