

சென்னை,
சென்னை பெசன்ட்நகர் கடற்கரை பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு காருக்குள் உட்கார்ந்து இளம் காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் ஒரே கல்லூரியில் படிக்கும் மாணவனும், மாணவியும் ஆவார்கள். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த போலீஸ்காரர் ஒருவர், காருக்குள் உட்கார்ந்திருந்த காதல் ஜோடியிடம் விசாரணை நடத்தினார்.
அவர்கள் மீது வழக்குப்போட்டு கைது செய்துவிடுவதாகவும் மிரட்டினார். வழக்குப்போடாமல் இருக்க ரூ.10 ஆயிரம் பணம் வேண்டும் என்றும் அந்த போலீஸ்காரர் கேட்டார். காதல் ஜோடி 'தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை' என கூறினார்கள். அருகில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பணம் எடுத்து தருவதாகவும் காதல் ஜோடி தெரிவித்தது. உடனே போலீஸ்காரர் நேரடியாக களத்தில் இறங்கினார். காதல் ஜோடியை அவர்களது காரிலேயே போலீஸ்காரர் அழைத்து சென்றார். காதலியை காரில் வைத்துவிட்டு, காதலன் காரைவிட்டு இறங்கி ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பணம் எடுத்தார். ரூ.8 ஆயிரம் பணத்தோடு திரும்பி வந்த காதலனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
போலீஸ்காரர் தனது காதலியை மிரட்டி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை கண்டு காதலன் சத்தம்போட்டார். உடனே போலீஸ்காரர் தனது பாலியல் அத்துமீறலை விட்டுவிட்டு, காதலன் வைத்திருந்த ரூ.8 ஆயிரம் பணத்தையும் பறித்துக்கொண்டு சற்று தூரத்தில் நின்ற தனது மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக காதல் ஜோடி கொடுத்த புகாரின்பேரில், சாஸ்திரிநகர் போலீசார் கொள்ளை உள்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரித்தார்கள்.
பணத்தையும் பறித்துக்கொண்டு பாலியல் அத்துமீறலிலும் ஈடுபட்ட போலீஸ்காரர் யார் என்பதை சாஸ்திரிநகர் போலீசார் கண்டுபிடித்தனர். அவரது பெயர் ஜோசப் (வயது 35) என்று தெரியவந்தது. அவர் சென்னை கொண்டித்தோப்பு போலீஸ் குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வந்தார். உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் அவர் தனிப்பட்ட முறையில் பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.
போலீஸ்காரர் ஜோசப் நேற்று கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று போலீசார் தெரிவித்தனர். கொள்ளைக்காரராக மாறிய போலீஸ்காரர் ஜோசப் மீது ஏற்கனவே இது போன்ற பணம் பறிப்பு வழக்கு உள்ளதா? என்று அதிரடி விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் சென்னை போலீஸ் வட்டாரத்தில் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.