திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கிய போலீஸ்காரர் கைது

வெளியே சொன்னால் இருவரும் தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று போலீஸ்காரர் மிரட்டி உள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கோவை,

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆனைமலை தெற்குத் தெரு பகுதியை சேர்ந்தவர் குப்புராஜ். இவருடைய மகன் உதயகுமார் (30 வயது). இவர் பில்லூர் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தார். இவர் பேரூர் அருகே பச்சாபாளையம் பகுதியை சேர்ந்த 27 வயது பெண்ணை ஆசை வார்த்தை கூறி காதலித்து உள்ளார். இதை அந்த பெண் நம்பினார்.

இதையடுத்து அடிக்கடி தனிமையில் சந்தித்து பேசி உள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிடம் பலமுறை உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இதில் அந்த பெண் கர்ப்பமானார். இந்த தகவல் போலீஸ்காரர் உதயகுமாருக்கு தெரியவந்ததும் அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து வடவள்ளி மற்றும் அவினாசி அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு, அந்த பெண்ணை அழைத்துக் சென்று கட்டாயப்படுத்தி, கருக்கலைப்பும் செய்துள்ளார். இதற்கு அந்தப் பெண் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

பின்னர் போலீஸ்காரர் உதயகுமாருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி குழந்தைகள் இருப்பது அந்த இளம்பெண்ணுக்கு தெரிய வந்தது. அந்த பெண், போலீஸ்காரரிடம் இப்படி என் வாழ்க்கையை நாசமாக்கி விட்டாயே என்று கூறி இருக்கிறார். இதை நீ வெளியே சொன்னால் நாம் இருவரும் தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன், கொலை செய்து விடுவேன் என்று போலீஸ்காரர் மிரட்டி உள்ளார்.

இருப்பினும் அந்த இளம்பெண் பேரூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில், போலீசார் உதயகுமாரை அழைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பெண்ணை ஏமாற்றி கர்ப்பமாக்கி, கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து, பேரூர் மகளிர் போலீசார், உதயகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com