

தென்காசி,
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 26). இவர் கடந்த 2024-ம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். தற்போது சென்னை ஆவடியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் போலீஸ்காரராகப் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் தனது சொந்த ஊரில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் பங்கேற்பதற்காக துறை ரீதியான விடுமுறை எடுத்துக்கொண்டு இடையன்குளத்திற்கு வந்திருந்தார்.
சொந்த ஊருக்கு வந்திருந்த விஜயகுமார், சம்பவத்தன்று அப்பகுதியில் வசிக்கும் 8-ம் வகுப்பு பயிலும் 13 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக கடுமையான தொல்லை கொடுத்துள்ளார். போலீஸ்காரரின் இந்த அநாகரிகச் செயலால் பெரும் அதிர்ச்சியும் பயமும் அடைந்த அந்த மாணவி, அழுதுகொண்டே தனது இல்லத்திற்கு சென்று பெற்றோரிடம் தனக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து தெரிவித்துள்ளார். அதைக் கேட்டு அவரது பெற்றோரும் உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் தரப்பில் உடனடியாக புளியங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் மகளிர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், சென்னை ஆவடி சிறப்பு காவல் படை போலீஸ்காரர் விஜயகுமார், பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து, சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டமான போக்சோ பிரிவுகளின் கீழ் விஜயகுமார் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து, தலைமறைவாக முயன்ற போலீஸ்காரர் விஜயகுமாரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜயகுமாரை சிவகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், நீதிபதியின் உத்தரவின்படி அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையைச் சேர்ந்த ஒருவரே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து போக்சோ சட்டத்தில் கைதான சம்பவம், தென் மாவட்டப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.