

சென்னை,
சென்னை கே.கே.நகர் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு போலீஸ்காரராக பணியாற்றி வந்தவர் விஷ்வநாத் (27 வயது). தர்மபுரியைச் சேர்ந்த இவருக்கு திருமணமாகி, ஒரு மாதத்துக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்துள்ளது. பரங்கிமலை தண்டுமா நகரில் உள்ள வாடகை வீட்டில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு விஷ்வநாத்தை பார்க்க அவரது நண்பர்கள் வீட்டுக்கு சென்றபோது, அறையில் உள்ள மின்விசிறியில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பரங்கிமலை போலீசார், விஷ்வநாத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் விஷ்வநாத் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில் அவர், ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததுடன், இதற்காக நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்ததும் தெரிய வந்துள்ளது.
இதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் பரங்கிமலை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.