போலீஸ்காரர் மனைவி தீக்குளிக்க முயற்சி

போலீஸ்காரர் மனைவி தீக்குளிக்க முயன்றார்.
போலீஸ்காரர் மனைவி தீக்குளிக்க முயற்சி
Published on

தீக்குளிக்க முயன்ற பெண்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. திருச்சி மாவட்டத்தில் உள்ள எட்டரை பகுதியை சேர்ந்தவர் கஜப்பிரியா (வயது 23). எம்.காம். பட்டதாரியான இவர் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அங்கு நுழைவுவாயிலில் நின்ற போலீசார் மனு அளிக்க சென்றவர்களை சோதனை செய்து அனுப்பி வைத்து கொண்டிருந்தனர்.

அப்போது கஜப்பிரியா பாட்டிலில் தான் மறைத்து வைத்திருந்த மண்எண்ணெயை திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதைக்கண்ட போலீசார் உடனடியாக பாய்ந்து சென்று அவரிடம் இருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றி அவரை ஓரமாக அமர வைத்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் கூறியதாவது:-

சேர்ந்து வாழ வைக்கக்கோரி...

நானும், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவரும் முகநூல் மூலம் அறிமுகமாகி காதலித்து வந்தோம். வெவ்வேறு சமூகத்தை சேர்ந்த நாங்கள் இருவரும் கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்டோம்.

ஆனால் தற்போது அவர் என்னை வேண்டாம் என்று ஒதுக்குகிறார். ஆகவே அவர் என்னுடன் சேர்ந்து வாழ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தற்கொலை முயற்சி

திருச்சி தாயனூர் பகுதியை சேர்ந்தவர் பனையடி. கூலித்தொழிலாளியான இவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு மண்எண்ணெய் பாட்டிலுடன் வந்தார். கலெக்டர் அலுவலக பிரதான நுழைவுவாயில் அருகே திடீரென தலையில் மண்எண்ணெயை ஊற்றி தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அவரிடம் இருந்து மண்எண்ணெய் பாட்டிலை கைப்பற்றினர்.

விசாரணையில் அவர், பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வீடு கட்ட முயன்று வருவதாகவும், ஆனால் ஒரு சிலர் வீட்டுக்கு செல்லும் பாதையை ஆக்கிரமித்து கொண்டதாகவும், இதனால் கட்டுமான பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. பாதையை மீட்டுத்தரக்கோரி பலமுறை மனு அளித்தும் எந்த பலனுமில்லை என்பதால் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறினார். இதையடுத்து அவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று அடுத்தடுத்து 2 பேர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com