சென்னையில் போதை மாத்திரை விற்றதாக பெண் போலீசின் கணவர், டாக்டர் கைது

போதை மாத்திரை விற்றதாக பெண் போலீசின் கணவர் மற்றும் டாக்டர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை,
சென்னை சைதாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே போதை மாத்திரை மற்றும் கஞ்சா விற்பனையில் மர்ம நபர்கள் ஈடுபடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சைதாப்பேட்டை தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் இரவு சைதாப்பேட்டை ரெயில் நிலையம் அருகே மாறுவேடத்தில் கண்காணித்தனர். அப்போது, அங்கு மோட்டாா் சைக்கிளில் 2 பேர் வந்து இறங்கினார்கள். அவர்களை பிடித்து விசாரித்தபோது அவர்களிடம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட போதை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் பிரபாகரன் (வயது 27) என்பவர் சைதாப்பேட்டையை சேர்ந்தவர். இவர் சென்னை ஆயுதப்படை பிரிவில் பெண் போலீசாக பணியாற்றுபவரின் கணவர் ஆவார். இன்னொருவர் ஹரிசுதன் (23), சேலையூரை சேர்ந்தவர். இவர், டாக்டராக உள்ளார். இவர்கள் இருவரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தொிவித்தனர்.
முன்னதாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் புத்தாண்டை முன்னிட்டு மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் விற்கப்படுவதாக வந்த தகவலின்பேரில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு தனிப்படை போலீசாரும், பரங்கிமலை போலீசாரும் இணைந்து தீவிரமாக கண்காணித்து வந்தனர்.






