கொள்கைப்பிடிப்பு, எளிய வாழ்க்கை, பொது வாழ்வில் பண்பான நடத்தை: 100 வயதை தொட்ட என்.சங்கரய்யா

இந்திய அரசியலில் மூத்த தலைவரான என்.சங்கரய்யாவின் 100-வது பிறந்தநாளையொட்டி அவரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நூற்றாண்டு குறுந்தகடு இன்று வெளியிடப்படுகிறது.
கொள்கைப்பிடிப்பு, எளிய வாழ்க்கை, பொது வாழ்வில் பண்பான நடத்தை: 100 வயதை தொட்ட என்.சங்கரய்யா
Published on

சென்னை,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யா வருகிற 15-ந் தேதி தன்னுடைய 100-வது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். எளிமையின் சின்னமாக, இந்திய அரசியலில் மூத்த தலைவராக வலம் வரும் என்.சங்கரய்யா சுதந்திர போராட்ட வீரர் ஆவார். மாணவ பருவத்திலேயே கம்யூனிஸ்டு கட்சியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். அவரது வாழ்வு போராட்ட களமானது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உருவானபோது இருந்த 36 தலைவர்களில் என்.சங்கரய்யாவும் ஒருவர்.

எம்.எல்.ஏ.வாக மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் இருந்து 1967-ம் ஆண்டிலும், மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதியில் இருந்து 1977, 1980-ம் ஆண்டுகளிலும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1957, 1962-ம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல்களில், மதுரை கிழக்கு சட்டமன்றத்தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மதுரை மாணவர் சங்கம் உருவான நேரத்தில், அதன் செயலாளராக என்.சங்கரய்யா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

சாதிக்கலவரங்கள், மத கலவரங்களின்போது அமைதியை உருவாக்க களப் பணியாற்றினார். 1998-ல் கோவையில் மதநல்லிணக்க பேரணியை நடத்தினார். கருணாநிதி மீது அதீத அன்பு கொண்டவர்.

கொள்கைப்பிடிப்பு, எளிய வாழ்க்கை, பொது வாழ்வில் பண்பான நடத்தை ஆகியவற்றால் இன்றைக்கும் எண்ணற்ற இளையோரை வசீகரிக்கிறார், வழிகாட்டுகிறார் என்.சங்கரய்யா. அத்தகைய சிறப்பு வாய்ந்த ஒரு தலைவர் 100-வது வயதை தொட்டு, சம கால அரசியலில் பயணிப்பது நமக்கெல்லாம் பெருமை தரும் விஷயமாகும்.

அவரது 100-வது பிறந்தநாளையொட்டி அவருடைய விடுதலை போராட்ட சிறை அனுபவங்கள், மக்கள் நல போராட்ட வரலாறு, மக்கள் பணி ஆகியவற்றை அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தென் சென்னை மாவட்ட குழு சார்பில், 'மக்கள் பணியில் சங்கரய்யா' என்ற தலைப்பில் குறுந்தகடு வெளியிடப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி சென்னை தியாகராயநகரில் உள்ள கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடக்கிறது. இந்த குறுந்தகடை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட உள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com