தமிழகம் முழுவதும் 28-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்

போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும்.
 தமிழகம் முழுவதும் 28-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம்
Published on

சென்னை,

நாடு முழுவதும் வருகிற 28-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு பின்வருமாறு;

போலியோ சொட்டு மருந்து முகாம்

”தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் 28 ஜூன் 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இம்மையங்களில் 52.91 இலட்சம் 0-5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க அனைத்து ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளன. தேசிய தடுப்பூசி அட்டவணைப்படி, ஏற்கனவே 0 - 5 வயதுடைய குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டிருந்தாலும் முகாம் நாளில் மீண்டும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும்.

பேருந்து, ரெயில் நிலையங்கள்

முகாம் நடைபெறும் நாட்களில் முக்கியப் பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சுங்கச் சாவடிகள், சோதனைச் சாவடிகள் மற்றும் விமான நிலையங்களில் தற்காலிக மையங்கள் (Transit Booths) அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போலியோ சொட்டு மருந்து வழங்கும் மையங்கள் காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்படும். முதல் நாளான 28.06.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று அனைத்து முகாம்களிலும், 29.06.2026 மற்றும் 30.06.2026 ஆகிய இரண்டு நாட்களில் தற்காலிக மையங்களிலும் (Transit Booths) போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. பிறமாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டில் வசிக்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து முகாம்களில் வழங்கப்படும்.

5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு..

நடமாடும் மருத்துவக் குழுக்கள் மூலமாக தொலைதூர மற்றும் எளிதில் செல்ல இயலாத பகுதிகளில் வசிக்கும் மக்கள் மற்றும் மலைவாழ் மக்களின் குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணிகளில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

எனவே, பெற்றோர்கள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்தி 5 வயதிற்குட்பட்ட தங்கள் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்தினை இட்டுக்கொள்ளும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com