போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்...!

தமிழகம் முழுவதும் 52.91 லட்ட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.
முதல்-அமைச்சர் விஜய்
Published on

சென்னை,

தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் இன்று நடைபெற்று வருகிறது. முகாமை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார்.

இளம்பிள்ளை வாதம் என்று அழைக்கப்படும் போலியோ வைரஸ் தொற்றுநோய் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் நோயாக இருந்தது. போலியோவை ஒழிக்க பல்வேறு உலக நாடுகளின் முயற்சியால் இந்த தொற்றுநோய் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியா போலியோ தொற்று நோய் இல்லாத நாடாக உருவாகியுள்ளது. அதேவேளை, போலியோ வருவதை தடுக்கும் வகையில் ஆண்டுதோறும் நாடு முழுவதும் 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவச போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் 52.91 லட்ட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், ரெயில் நிலையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் என மொத்தம் 43 ஆயிரத்து 51 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை பாலவாக்கத்தில் உள்ள ஆதி திராவிடர் நல உயர்நிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாமை முதல்-அமைச்சர் விஜய் தொடங்கி வைத்தார். குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி முதல்-அமைச்சர் விஜய் முகாமை தொடங்கி வைத்தார். இதையடுத்து, தமிழகம் முழுவதும் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடங்கியுள்ளது. இன்று மாலை 5 மணிவரை போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு (5 வயதிற்கு உட்பட்ட) போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும் என்று அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com