தூத்துக்குடி பனிமய மாதா ஆலய வளாகத்தில் அரசியல், திரைப்பட விளம்பரங்களுக்கு தடை


தூத்துக்குடி பனிமய மாதா ஆலய வளாகத்தில் அரசியல், திரைப்பட விளம்பரங்களுக்கு தடை
x

தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்திற்குள் வருபவர்கள் அரசியல் கட்சியின் அடையாளங்கள், சின்னங்கள், கொடிகளை ஆலயத்தின் உட்பகுதியிலோ, வளாகத்திலோ பயன்படுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி

தூத்துக்குடி பனிமய மாதா பேராலய வளாகத்தில் அரசியல் கொடி, சின்னங்கள் மற்றும் திரைப்பட விளம்பரங்களை பயன்படுத்தக்கூடாது என்று ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக ஆலய நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தூத்துக்குடி பரிசுத்த பனிமய அன்னை திருத்தலப் பேராலயத்திற்கு வருகை தரும் இறைமக்கள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஆலயத்தின் புனிதத்தைப் பேணிப் பாதுகாக்கும் வகையில் மூன்று நடைமுறைகளைத் தவறாது கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

1. அரசியல் அடையாளங்களைத் தவிர்த்தல்:

அரசியல் கட்சியைச் சார்ந்தவர்கள் பேராலயத்திற்கு வரும்போது கட்சியின் அடையாளங்கள், சின்னங்கள் மற்றும் கொடிகளை பேராலயத்தின் உட்பகுதியிலோ அல்லது வளாகத்திலோ பயன்படுத்தக்கூடாது. ஆலய வளாகத்திற்குள் கோசங்களும், வெடிகளும் போடக்கூடாது.

2. திரைப்பட விளம்பரங்களுக்குத் தடை:

திரைப்பட ப்ரோமோஷன் (Promotion) மற்றும் விளம்பர நோக்கத்திற்காக பேராலயத்தையோ, பேராலய வளாகத்தையோ பயன்படுத்தக் கூடாது. விளம்பர நோக்கில் புகைப்படங்கள் எடுத்து அவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறோம்.

3. பேராலயப் புனிதத்தைப் பேணுதல்:

பேராலயத்தின் புனிதத்தையும், அன்னையின் மாண்பையும் போற்றும் வகையில் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுகிறோம். ஆலயத்தின் மாண்பைக் குறைக்கும் வகையிலான அல்லது அவமதிக்கும் வகையிலான அனைத்து செயல்களையும் இனி வரும் காலங்களில் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story