

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், தற்போதுள்ள தவெகவின் பலம் 112 ஆக உள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், 2 நாட்கள் ஆகியும் இன்னும் தவெக கட்சி ஆட்சி அமைக்க முடியவில்லை.
முன்னதாக, தவெக தலைவர் விஜய், நேற்று மாலை கவர்னர் அர்லேகரை சந்தித்தார். அப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி கவர்னரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு விஜய்க்கு இல்லாததால், அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை.
இந்த பரபரப்பான சூழலில், தவெக தலைவர் விஜய் இன்று மீண்டும் கவர்னரை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் தங்களை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும் என கவர்னரிடம் விஜய் கோரிக்கை வைத்தார். முதல்-அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் எனவும் கவர்னரிடம் விஜய் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக கூறப்பட்டது. கவர்னர் - விஜய் இடையேயான சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது.
113 எம்எல்ஏக்களை வைத்து எப்படி ஆட்சி அமைப்பீர்கள்? வேறு எந்த கட்சி தவெக அரசை ஆதரிக்கும்? பதவி ஏற்ற பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்று எப்படி நம்புகிறீர்கள்? உங்களிடம் இருக்கும் எம்எல்ஏக்களை வைத்து நிலையான அரசை அமைக்க முடியுமா?
118 எம்எல்ஏக்கள் ஆதரவை இருப்பதை காட்டுங்கள், அவ்வாறு நிரூபித்தால் மட்டுமே பதவி பிரமாணம் செய்து வைக்க முடியும். பெரும்பான்மை கிடைத்துவிடும் எனும் யூகத்தின் அடிப்படையில் செயல்பட முடியுமா?' என்று விஜயிடம் தமிழக கவர்னர் அர்லேக்கர் கேள்விகளை எழுப்பினார். அப்போது அவரிடம், விதிமுறைகளின்படி
தன்னை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று விஜய் மீண்டும் வலியுறுத்தினார்.
பெரும்பான்மையை எப்படி நிரூபிப்பீர்கள் என்ற கவர்னரின் கேள்விகளுக்கு விஜய் நேரடியாக பதில் அளிக்க முடியவில்லை. அவர் அளித்த விளக்கத்தில் கவர்னருக்கு திருப்தி இல்லை என்று கூறப்படுகிறது. இதனால், ஆட்சி அமைக்க அழைப்பு விடுப்பது, பதவிப்பிரமாணம் செய்து வைப்பது பற்றி கவர்னர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. இதனால் தவெக ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இந்தநிலையில், அரசியல் அதிரடி நிகழ்வாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 4 மணிக்கு கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்திக்கிறார். அடுத்தபடியாக, ஸ்டாலினுக்கும் கவர்னர் அழைப்பு விடுத்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தவெக ஆட்சி அமைக்க விஜயிடம் பெரும்பான்மை இல்லை என ஆளுநர் கூறியுள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற இருக்கிறது. தமிழக அரசியல் நிகழ்வு நொடிக்கு நொடி மாறிக் கொண்டே இருக்கிறது. அதிமுக கூட்டணி 53 இடங்களில் கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.