அரசியல் கட்சியினர், பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்

பூபதியூர் நடைபாதை பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி அரசியல் கட்சியினர், பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால், கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
அரசியல் கட்சியினர், பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம்
Published on

கோத்தகிரி

பூபதியூர் நடைபாதை பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி அரசியல் கட்சியினர், பொதுமக்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால், கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

நடைபாதை பிரச்சினை

கோத்தகிரி அருகே ஜக்கனாரை ஊராட்சி ஓரசோலையில் உள்ள பூபதியூர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்துக்கு, செங்குத்தான காங்கிரீட் நடைபாதை உள்ளது. ஆனால் அதில் நடந்து செல்வதிலும், இறந்தவர்களின் உடல்களை சுமந்து செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அருகில் உள்ள தனியாருக்கு சொந்தமான நிலத்தை நடைபாதையாக பயன்படுத்தி வந்தனர்.

அந்த நிலத்தை சுற்றிலும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதன் உரிமையாளர் சுற்றுச்சுவர் கட்டும் பணியை தொடங்கினார். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் நடைபாதையை அவர் ஆக்கிரமிப்பு செய்துவிட்டதாக ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோத்தகிரி தாசில்தாருக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி அந்த நிலத்தில் நேற்று முன்தினம் வருவாய்த்துறையினர் நில அளவை செய்தனர்.

காத்திருப்பு போராட்டம்

இந்த நிலையில் நடைபாதை பிரச்சினைக்கு தீர்வு காண வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர்.

இதற்கிடையில் குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று காலை கோட்டாட்சியர் புஷ்ண குமார் தலைமையில் கோத்தகிரி தாசில்தார் காயத்ரி மற்றும் போலீசார் முன்னிலையில் கிராம மக்களிடம் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.

ஆனால் அதே நேரத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் மண்ணரசன், ஒன்றிய செயலாளர் பெரியசாமி ஆகியோர் தலைமையில் பூபதியூர் ஊர்த்தலைவர் மாகாளி உள்பட கிராம மக்கள் 50 பேர் மற்றும் கம்யூனிஸ்டு கட்சியினர், மக்கள் அதிகாரம் அமைப்பினர் கோத்தகிரி தாசில்தார் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.

3 மணி நேரம் பரபரப்பு

இதையொட்டி அங்கு பொறுப்பு இன்ஸ்பெக்டர்கள் வேல்முருகன், கோமதி, சரவணகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இருப்பினும் அரசியல் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் தாசில்தார் அலுவலகத்துக்குள் செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். எனினும் சமாதானம் அடையாமல் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக 10-க்கும் மேற்பட்ட வக்கீல்களும் களமிறங்கினர்.

இதையடுத்து குன்னூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து அமைதி பேச்சுவார்த்தை முடிந்து வந்த கோத்தகிரி தாசில்தார் காயத்ரி, அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில், சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி கிராம மக்களுக்கு நடைபாதை கிடைப்பது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க கலெக்டர் மற்றும் கோட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்பப்படும் என்று தாசில்தார் உறுதி அளித்தார். இதை ஏற்று அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் சுமார் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com