

சென்னை,
நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டசபை இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் இறங்கியுள்ளன. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., புதிய தமிழகம், த.மா.கா. புதிய நீதி கட்சி ஆகியவை இடம் பெற்று உள்ளன.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ், கொ.ம.தே.க., கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க., இந்திய ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை உள்ளன.
இதேபோன்று அ.ம.மு.க., மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தலில் போட்டியிடுகின்றன. அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர முனைப்புடன் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ செய்தியாளர்களிடம் பேசும்பொழுது, மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், தேர்தலை நடத்தும் மிகப்பெரும் பணியை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது.
பணப்பரிமாற்ற செயல்பாடுகளை தீவிரமாக கவனித்து வருகிறோம். தேர்தல் விதிமுறைகளை அரசியல் கட்சிகள் முழுமையாக கடைபிடிக்க வேண்டும்.
1950 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு வாக்காளர்கள், பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா என்பது உட்பட பல தகவல்களை பெறலாம் என அவர் கூறியுள்ளார்.